
அரச ஊழியர்களுக்கு நிகரான சம்பளம் பெருந்தோட்டத் தொழிலாளகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மருதானையில் உள்ள சமூக சமய மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த காலம் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் முடியவுள்ளது.
நிலையில் புதிய உடன்படிக்கையின் ஊடாக தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
சாதாரணமாக அரசாங்க ஊழியர்களின் மாதாந்த அடிப்படை சம்பளம் 32,040 ரூபாவாக இருக்கிறது. அத்துடன், அவர்கள் நாளொன்றிற்கு குறைந்த பட்சம் 1, 281 ரூபாவைப்பெறுகிறார்கள் .
இதேபோன்று பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கும் நாளொன்றுக்கு சம்பளமாக 1281 ரூபாவை வழங்குவதற்கு புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக முதலாளிமார் சம்மேளனமும் பிரதான தோட்டத்தொழில் துறை தொழில் சங்கங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.