பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மூன்றுமாத நிலுவைக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கவில்லை என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ரூபா வேதன உயர்வே வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற தொகைக்கு நிலுவைப் பணத்தை வழங்கி தேயிலை சபையின் பணத்தை வீண்விரயமாக்க தாம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை சபையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
கடந்த முறை 18 மாதங்களுக்கு கூட்டு ஒப்பந்தம் தாமதமானமைபோன்று இம்முறையும் தாமதமாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும், அதற்கு இடமளிக்காது, மூன்று மாதங்களுக்குள் கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை கூட்டு ஒப்பந்தம் ஊடாக 730 ரூபா நாளாந்த வேதனம் வழங்கப்பட்ட நிலையில், இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் 750 ரூபா வேதனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 20 ரூபா வேதனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த 20 ரூபாவை நிலுவைத் தொகையாக வழங்குவதற்குத் தாங்கள் கருதவில்லை என்றும், தொழிற்சங்கங்களும் இவ்வாறு கோரவில்லை என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், நிலுவைக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானித்தால், 20 ரூபாவிற்கான நிலுவைக் கொடுப்பனவையே வழங்க வேண்டும் என்றும், தேயிலை சபையின் பணத்தை இதுபோல வீண்விரயம் செய்வதற்கும் தாம் விரும்வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களது நாளாந்த வேதனத்தில் அரசாங்கத்தின் நிவாரண நிதியாக 50 ரூபாவை இணைப்பதற்கு கொள்கை ரீதியான இணங்கப்பட்டுள்ளது.
தேயிலை சபையின் நிதியில் இருந்து இதற்காக 1.2 பில்லியன் ரூபாய் கடன் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும், இந்த கடனை அரசாங்கம் பின்னர் தேயிலை சபைக்கு செலுத்தும் என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதற்கான அமைச்சரவை யோசனையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தாக்கல் செய்ய இணங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.