வீதி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கெதிரான மாற்றம் செய்யப்பட்ட புதிய அபராத பத்திரம் எதிர்வரும் வாரம் முச்சக்கர வண்டி மற்றும் பஸ் நிறுவனங்களிடம் கையளிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதற்கமைய விசேட சபையின் பங்களிப்புடன் உரிய தரப்பினரிடம் அபராத பத்திரம் கையளிக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்தார்.
வீதி போக்குவரத்து விதி மீறல்களுக்கான புதிய அபராத பத்திரம் தயாரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் குறித்த அபராத பத்திரத்தை உரிய தரப்பினரிடம் கையளித்த பின்னர் அது தொடர்பில் அவர்களுடைய ஆலோசனைகளும் பெறப்படும் என்றும் அதற்கமைய மாற்றங்களை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரித்தார்.
புதிய அபராத முறையை நடைமுறைப்படுத்துவதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம் மற்றும் அதன் இரண்டாவது உப பத்திரம் என்பவற்றையும் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.