கொவிட் – 19′ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக விசேட படையணியொன்று உருவாக்கப்பட்டு, அதன் ஊடாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனையின் பேரில், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டிலேயே இந்நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
மேற்படி வேலைத்திட்டத்துக்கு சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி,
” கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கை உட்பட உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறித்த வைரஸ் இலங்கையில் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, தடுப்பதற்காக அரசாங்கத்தால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் ஓர் அங்கமாக மூன்று தினங்களுக்கு பொதுவிடுமுறைகூட வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பெருந்தோட்டப்பகுதிகளில் பரவாமல் இருப்பதற்காக, அது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றோம்.
வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான சுகாதார வழிமுறைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது. இதற்காக இளைஞர் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் அவர்கள் இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
அத்துடன் , பெருந்தோட்ட மனிதவள நிதியமும் சிறப்பு படையணியொன்றை உருவாக்கப்பட்டுள்ளது. கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, காலி போன்ற பிராந்தியங்களில் வைத்தியர்களும், மருத்துவ முகாமையாளர்களும் தயார் நிலையிலேயே இருக்கின்றனர்.
எனவே, மருத்துவ ஆலோசனைகளை இவர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியாதவர்கள்கூட இவர்களிடம் ஆலோசனைகளை பெறமுடியும்.
அதேவேளை, சமூக நலன்புரி அதிகாரிகள் ஊடாகவும் சில வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. மலையக பகுதிகளிலுள்ள இளைஞர், யுவதிகள் வைரஸ் தாக்கம் தொடர்பில் வழிப்பாகவே இருக்கவேண்டும்.
போலி தகவல்களை எவரும் பரப்பக்கூடாது. பொறுப்புடனும், பொதுநலனுடனும் செயற்படவேண்டிய தருணம் இது.
கொரோனா வைரஸ் தொற்று மலையகத்தில் பரவுவதை தடுப்பதற்காக எம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.
வைத்திய ஆலோசனை பெறவேண்டுமாயின், தொடர்புகொள்ள வேண்டிய விபரம்.
வைத்தியர் கல்யாணி – கண்டி – 0775728552
வைத்தியர் கிரிஷாணி – நுவரெலியா – 0757634956
வைத்தியர் பிரமோத் – ஹட்டன் – 0773411513
வைத்தியர் சத்சரா – பதுளை – 0712612008
வைத்தியர் கோசல – இரத்தினபுரி – 0718487471
வைத்தியர் மனோரி – காலி – 0773452909
மூலம் – லீட்நியுஸ்7