மலையக தோட்டப் பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் கல்வியமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
மாதாந்தம் வழங்கப்படும் 6000.00 ரூபா சம்பளம் அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர், இத்தொழில்வாய்ப்பை பெற்றவர்களில் அதிகமானவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் என்றும் மாதாந்தம் அவர்களுக்கு கிடைக்கும் ஆறாயிரம் ரூபாவானது போக்குவரத்துக்கும் மேலதிக கற்றல் நடவடிக்கைக்கும் பயன்படுத்தப்படுகிறது என்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள அதிகரிப்பு தொடர்பில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தபட்டு அனுமதி பெறப்பட்ட போதிலும் இன்னும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்றும் இதனால் ஆசிரிய உதவியாளர்கள் கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைத்தளம்