பெருந்தோட்டப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு பத்தாயிரமாக கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான கடமை பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இனி மாகாண சபைகளே உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஆசிரிய உதவியாளர்கள் கொடுப்பனவு அதிகரிப்பு விடயத்தில் மாகாணசபைகள் அசமந்த போக்கை கடைபிடிக்கின்றமையானது எனக்கு கவலையளிக்கிறது. ஏற்கனவே ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ஆறாயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரித்து பத்தாயிரமாக வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்து அதற்கான அமைச்சரவை அனுமதியையும் பெற்று கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் கடந்த மூன்றாம் திகதி அனைத்து மாகாண செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இனி உரிய நடவடிக்கையை மேற்கொண்டு ஆசிரிய உதவியாளர்களுக்கான கொடுப்பனவை வழங்குவது மாகாணசபைகளின் கடமையாகும். என்னை குறைகூறுவது எந்த வகையில் நியாயமானது என்று தெரிவித்தார்.