கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
போக்குவரத்து ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அத்துடன், தென் அதிவேகப் பாதையில் பயணிக்கும் பேருந்துகள் கொட்டாவ வரையில் மாத்திரம் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்த பேருந்து சேவைகள் மாலை 6 மணிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் பேருந்து நிறுத்தப்படும் இடங்களுக்கு மாத்திரமே இதன்போது கட்டணம் அறவிடப்படும்.
பேருந்துகள் பயணிக்கும் இடத்தின் பெயர் பேருந்தின் முன் கண்ணாடியில் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அத்துடன், பேருந்துகளுக்கான காலாவதியான அனுமதி பத்திரத்தை பயன்படுத்தும் காலத்தை நீடிப்பதற்கு போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியான பேருந்து அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும் என போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மூலம் : Sooriyanfmnews.lk