மாணவர்களின் பாதுகாப்பை புறந்தள்ளி தேர்தலை நோக்காகக்கொண்டே அரசு செயற்படுகிறது

பாடசாலைப் பிள்ளைகளின் பாதுகாப்பைப் புறம்தள்ளி – வெறும் தேர்தலை நோக்காகக்கொண்டே இந்த அரசு செயற்படுகிறது. மக்களின் பாதுகாப்பைப் பற்றி இந்த அரசு சிந்திக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஆசிரியர் சங்கமும் அதன் தோழமைச்சக்திகளான யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து பல காலமாக சர்வதேச தொழிலாளர் தினத்தை தொடர்ச்சியாக கொண்டாடிவந்துள்ளது.

கொவிட் 19 உலக நோய்த் தொற்று இலங்கை உள்ளிட்ட ஏறத்தாழ எல்லா நாட்டு மக்களின் வழமையான செயற்பாடுகளை முடக்கியுள்ள நிலையில், தவிர்க்க முடியாத ஊரடங்கும் தனிமைப்படுத்தலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினதும் அதன் தோழமை சக்திகளான இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் போன்றவர்களினதும் – வருடாந்த மேதின ஒன்று கூடலை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் எமது சிந்தனைகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

”தொழிலாளர்களாக ஒன்றுபடுவோம் ” என்னும் தொனிப்பொருளில் வழமையாக சர்வதேச மே தினத்தில் ஒன்றிணையும் தொழிலாளர்களாகிய நாம் – கொவிட்-19 நோய்த்தொற்றின் உலகளாவிய நெருக்கடியின் மூலம் ஒன்றுபடமுடியாத சூழலில் உள்ளோம்.

இலங்கையின் – இன்றைய இந்தச் சூழல் – இலவசக் கல்வியையும் இலவச சகாதாரத்துறையையும் – தொழிற்சங்கங்கள் பாதுகாத்ததன் விளைவை – அனுபவரீதியாக அனைவரையும் உணரவைத்துள்ளது.

உலக வரைபடத்தில் – வெற்றியடைந்ததாகக் கருதிய – முதலாளித்துவ வல்லரசு நாடுகள் – சுகாதாரத்துறையையும், கல்வித்துறையையும் தனியார் மயமாக்கியதன் விளைவால் – மீளச்சிரமப்படும் பாரிய நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதை நாம் அறிவோம்.

இலங்கை அரசு – ‘சைட்டம்’ முறைமை மூலம் – இலவச கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் – தனியார் மயப்படுத்தி நசுக்க முற்பட்டவேளை – அதனை எதிர்த்துப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் இணைந்து முன்கொண்டு சென்றதன் விளைவாலேயே – இலவச சுகாதாரமும், இலவச கல்வியும் – இன்றும் மக்களைப் பாதுகாத்துவருகிறது.

ஆயினும் – சுதந்திரமான கல்விக்கானதும் சுகாதாரத்துறைக்கானதுமான போராட்டம் இன்னும் முழுமைபெறவில்லை.

யுனஸ்கோவின் அறிக்கையிடலின் அடிப்படையில் – கொவிட் -19 பிரச்சினையால் உலகளவில் 1.7 பில்லியன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உலக தொழிலாளர் சம்மேளனத்தின் தரவுகள் 1.5 பில்லியன் வேலையிழப்புகள் உலகளவில் காணப்படுவதாக குறிப்பிடுகிறது.

இந்நிலையில் – இந்த நெருக்கடிக்குள்ளிருந்து எவ்வாறு மீள்வது? என்று சிந்திக்கும் பொறுப்பு எம் அனைவர்மேலும் சுமத்தப்பட்டுள்ளது.

ஆயினும் – இலங்கை கல்வித்துறையில் – மே-11 பாடசாலை ஆரம்பிக்கும் என ஏப்ரல் -11 இலேயே தீர்மானித்திருந்தார்கள். ஏப்ரல் -11 இல் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் தொகை 197 ஆக மட்டுமே இருந்தது. மே-1 இல் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் தொகை 600 ஐ தாண்டியிருக்கிறது.

அவ்வாறாயின் – இந்த நெருக்கடிக்குள்ளிருந்து எவ்வாறு மீள்வது என்று இன்றைய அரசு பொறுப்புடன் செயற்படுகிறதா?

பாடசாலைப் பிள்ளைகளின் பாதுகாப்பைப் புறம்தள்ளி – வெறும் தேர்தலை நோக்காகக்கொண்டே இந்த அரசு செயற்படுகிறது. மக்களின் பாதுகாப்பைப் பற்றி இந்த அரசு சிந்திக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல்-
கொரோனா கல்விப் பாதிப்பு தொடர்பாக – தற்போது உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் – தனியார் பாடசாலை உரிமையாளர் ஒருவர் உட்பட தனியார் பாடசாலைகளின் இரண்டு அதிபர்களுமே உள்வாங்கப்பட்டுள்ளனர். இது இலவசக் கல்வி தொடர்பாக இந்த அரசின் அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது. இதற்கு தொழிற்சங்கமாகவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளோம்.

இலங்கையின் பொருளாதாரத்தில் – சிறு தொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள், கடற்தொழிலாளர்கள், ஆடை உற்பத்தியாளர்கள், தோட்டத்தொழிலாளர்கள் எனப் பலதரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கான ஒரு அவசரத்தீர்வும் அவசியமானதாகும்.

நோய்த்தொற்று என்பது – மனிதருக்கு தெரிந்தே வருவதில்லை. ஆனாலும் நோயாளிகளை உளவியல் ரீதியாக பாதிப்படையச்செய்யும் செயற்பாடுகள் உருவாகி வருவது தவிர்க்கப்படவேண்டும். கொரோனா நோய்த்தொற்றைக் காரணமாகக்கொண்டு – அடிப்படை வாதங்களையும் – இனவாதங்களையும் தூண்டும் அரசின் நோக்கம் தோற்கடிக்கப்படவேண்டும்.

எனவே – இக்கட்டான இந்த சூழலிலிருந்து – உலக தொழிலாளர்கள் மீண்டுவரவும் – இலங்கையில் – கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் இலவசமாக தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி – நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என – இன்றைய மே தினத்தில் அறைகூவல் விடுக்கின்றோம். என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சர்வதேச தொழிலாளர் தின செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435