மாகாண கல்வி மானியங்களை முறையாக பயன்படுத்தவில்லை என ஜனாதிபதி குற்றம்சுமத்தியுள்ள தருணத்தில் “கல்வி அபிவிருத்தி நிதியம்” என்ற பெயரில் வடமத்திய மாகாண கல்வியதிகாரிகள் மாணவர்களை கொண்டு டிக்கட் விற்பனையில் ஈடுபடுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கையொப்பத்துடனான ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் கல்வி அபிவிருத்தி நிதியம் என்ற பெயரில் வடமத்திய மாகாண பாடசாலை மாணவர்களை கொண்டு டிக்கட்டுகளை விற்பனை செய்யும் நடவடிக்கை அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது.
இதற்காக வடமத்திய மாகாண கல்வி அமைச்சு 10 லட்சம் டிக்கட்டுகளை அச்சிட்டுள்ளதுடன், ஒரு டிக்கட்டின் விலை 20 ரூபாய் என பெறுமதியிடப்பட்டுள்ளது.
ஒரு பாடசாலை மாணவருக்கு 5 தாள்களை கொண்ட டிக்கட் புத்தகம் வீதம் வடமத்திய மாகாணத்தில் உள்ள 254000 மாணவர்களுக்கு குறித்த டிக்கட் புத்தகம் வழங்கப்படுகிறது.
அனைத்து தரப்பினரதும் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கடந்த வருடமும் இந்தமாதிரியான செயற்பாடுகளை வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகள் மேற்கொண்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மாணவர்களை கொண்டு டிக்கட் விற்பனையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இந்தவகையில் கடந்த ஒருவருட காலமாக வடமத்திய மாகாண கல்வி நிதியத்திற்காக என கூறி பாடசாலை மாணவர்களைக் கொண்டு டிக்கட் சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர்.
இதனூடாக பின்தங்கிய பிரதேச மாணவர்கள் தமது கல்வி செலவை தாமே தேடிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதே இதனூடாக புலப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.