மின்சாரசபை ஊழியர்கள் அனைவருடைய விடுமுறையும் எதிர்வரும் 20ம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் பொது முகாமையாளர் ஏ.கே சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (13) நன்பகல் முதல் வேலைநிறுத்த போராட்டமொன்றை மின்சாரசபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களுடைய விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்சாரசபை அறிவித்துள்ளது.
எந்த சூழ்நிலையிலும் நாட்டு மக்களுக்கு மின்சாரம் வழங்குவது மின்சாரசபையின் பொறுப்பு என்று என்று தெரிவித்துள்ள மின்சாரசபை, அதனை கவனத்திற்கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விடுமுறை ரத்து தொடர்பான சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அத்தியவசிய விடுமுறை தேவைப்படுபவர்கள் அந்தந்த கிளை முகாமையாளர் அல்லது மேல் மட்ட உயரதிகாரியின் அனுமதியை பெற்று விடுமுறை பெறலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தோம். இது தொடர்பில் பல தடவைகள் உயர் மட்டத்திற்கு தெரியப்படுத்தியும் சரியான தீர்வு எட்டப்படவில்லை என்று இலங்கை மின்சார பொதுச் சேவைச் சங்கத் தலைவர் மாலிக்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சாரசபை ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் மின்வழு அமைச்சு உரிய கவனம் செலுத்தியுள்ளதாகவும், அமைச்சின் உள்ளக கணக்காய்வு பிரிவு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் மின்சாரசபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.