மின்ரசீது எழுதும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி

மின்சாரகட்டண ரசீது எழுதும் ஊழியர்களின் பிரச்சினை தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் மின்சார கட்டணத்திற்கான ரசீது எழுதும் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பிரியந்த விக்கிரமசிங்கவுடன் சகோதர இணையதளமான  வெடபிம மேற்கொண்ட செவ்வியின் தமிழ் வடிவம் வருமாறு….

ஆளணி நிறுவன ஊழியர்களாக பணியாற்றி வந்த மின்கட்டண ரசீது எழுதும் ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி கடந்த காலங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதன் தற்போதைய நிலைமை என்ன?

குறித்த பணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற உறுதிமொழி மற்றும் செயற்பாடு காரணமாக நாம் தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்தினோம். தற்போது அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த 8ஆம் திகதி தொடக்கம் இந்நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது. எனினும் இதில் நிறைய பிரச்சினைகள் காணப்படுகிறது. எமக்கு வாக்குறுதியளித்தபடி எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

என்ன வகையான பிரச்சினைகள் காணப்படுகின்றன?

வெளியிலுள்ளோரை பணியில் இணைக்கும் முறையின் படியே இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பல வருடங்களாக ஆளணி நிறுவனத்தின் ஊழியர்களாக பணியாற்றிய காலம், அனுபவம் என்பன கணக்கில் எடுக்கப்படவில்லை. குறைந்த தரமே வழங்கப்படுகிறது. 18- 25 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் இணைந்துக்கொண்டவராக இருக்க வேண்டும். 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் பணியில் இணைந்தவராக இருக்க வேண்டும். ஒரே தடவையில் நான்கு பாடங்களில் திறமை சித்தி பெற்றிருக்க வேண்டும். இருதடவைகளில் 4 திறமை சித்தி பெற்றவர்களும் இருக்கின்றனர். 10 வருடத்திற்கு மேல் பணியாற்றியவர்கள் உள்ளனர். இவர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கப்போவதில்லை. அது பாரிய அநீதியாகும்.

மேற்கூறப்பட்ட தகுதிகளுடன் சுமார் எத்தனை ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சுமார் 1400 பேர் ஆளணி நிறுவன ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். இவ்வாறு சென்றால் ஆயிரம் பேருக்காவது நிரந்தர நியமனம் கிடைக்குமா என்று தெரியவில்லை.இதன்போது 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தையே இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் நிறுவனத்தின் உள்ளக இணைத்துக்கொள்ளல் நடவடிக்கையினூடாக இணைத்துக்கொள்ள முடியும். அவ்வாறு 1994இல் அமைச்சர் ரத்வத்தவின் காலத்தில் சிலர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அக்காலத்தில் பணியில் இணைத்துக்கொள்ளும் வயது 35 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக குறைந்த தகைமையுடையவர்களையும் இணைத்துகொள்ளுமாறா நீங்கள் அழுத்தம் கொடுக்கிறீர்கள்?

இல்லை. திறமை சித்தியொன்றாவது இல்லாதவர்களை இணைத்துகொள்ளுமாறு நாம் கூறவில்லை. இவர்களுக்கு தகுதி இல்லையென்றால் பல வருடங்கள் எவ்வாறு பணியாற்றினார்கள். தகுதி உள்ளமையினால் தான் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அதனால் தகைமைக்கு ஏற்றாற் போல சுற்றுநிரூபத்தை மாற்றியமைக்க முடியும். அத்துடன் வெளியில் இருந்து இணைத்துக்கொள்வதற்காக சட்டதிட்டங்களை விடவும் உள்ளே இருப்பவர்களை இணைத்துக்கொள்வதற்கான சட்டத்தில் வேறுபாடுகள் உள்ளன. இவர்கள் பல வருடங்களாக சபையில் பணியாற்றிவருகின்றனர். அதனால் அவர்கள் உள்ளக ஊழியர்களான சபையில் இணைத்துக்கொள்ள முடியும்.

நீங்கள் இதுதொடர்பில் பொறுப்பானவர்களை தெளிவுபடுத்தியில்லையா?

தற்போதைக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வருவதனால் அதனை தடை செய்யும் வகையில் எதுவும் செய்ய முடியாது. எனினும் இதிலுள்ள அநீதி பற்றி அமைச்சின் செயலாளர் மற்றும் நிர்வாக செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலம் விளக்கி கூறியுள்ளோம். இன்னும் பதில் கிடைக்கவில்லை. எவ்வாறிருப்பினும் நாம் அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். இப்போதைக்கு கடிதம் அனுப்பி கலந்துரையாடலின் ஊடாக பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்வோம். முடியாமல் போகும்பட்சதில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்து தீர்மானிப்போம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435