
முகக்கவசம் அணிதல், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றும் நடைமுறை தொடரும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொவிட்-19 தொற்று அபாயம் உலகத்திலிருந்து முழுமையாக நீங்கவில்லை.
எனவே, இந்த அபாய நிலை நீங்கும்வரையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
பின்பற்றப்பட்டு வருகின்றன சுகாதார நடைமுறைகள் அவ்வாறே உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டும்.
கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நடைமுறைகளுக்கு எதிராக எவராவது செயற்படுவாராயின், அது நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு எதிராக செயற்பட்டதாக கருதி, சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழும், குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும்.
எனவே, சுகாதார நடைமுறைகளை அவ்வாறே பின்பற்றுவதுடன், தனிமைப்படுத்தல் சட்டத்திற்க மதிப்பளிக்குமாறும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை, முகக்கவசம் அணியாது பொது இடங்களுக்கு பிரவேசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அவர்களது தகவல்களை பெற்று கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களது தகவல்கள் அடங்கிய தரவுகளை தயாரித்து எதிர்வரும் வாரத்தில் இருந்து நாளாந்தம் தமக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் சகலரும் முக கவசம் அணிய வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள போதும் அந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என பதில் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளது.
இதனையடுத்தே பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.