இந்திய பெண் ஊடகவியலாளரான ராணா அய்யுப் என்பவரது முகப்புத்தகத்தில் பாலியல் துஷ்பிரயோக வார்த்தைகளை பயன்படுத்தி தகவல் அனுப்பிய இந்தியர் ஒருவரை ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனம் ஒன்று உடனடியாக பதவி நீக்கியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு முதல் அல்பா பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 31 வயதான கேரளாவைச் சேரந்த பின்சிலால் பாலச்சந்திரன் என்பவரே இவ்வாறு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அனுப்பிய மிக மோசமான பாலியல் சார்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி அனுப்பப்பட்ட தகவல்களை டிவிட்டர் கணக்கினூடாக ராணா அய்யுப் வெளியிட்டதையடுத்தே இவ்விடயம் வெளியே கசிந்துள்ளது.
குறித்த நபர் இஸ்லாம் மார்க்கம் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான தகவல்களையும் அவரது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளமை ஊடகவியலாளருடனான மோசமான தகவல் பரிமாற்றத்தையடுத்து ஆராய்ந்து பார்க்கையில் குறித்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 8ம் திகதி காலை 8.00 மணிக்கு பாலச்சந்திரன் குறித்து ஆராயப்பட்டு உறுதி செய்யப்பட்டு உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று நிறுவனத்தின் மனித வள முகாமையாளர் ஷாதி அல் ரிபாய் கல்ப் நியுஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.