முச்சக்கர வண்டியில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க நேற்று (22) தெரிவித்தார்.
நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிகை அலங்கார நிலையங்களையும் வைத்தியசாலைகளுக்கு அருகிலுள்ள சிறு உணவு விற்பனை நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – வாழைத் தோட்டம் (கெசல்வத்த) பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் சிகை அலங்காரம் செய்யும் ஒருவர் மூலமே கொரோனா வைரஸ் தொற்று பரவி இருக்கலாம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
குறித்த சிகை அலங்காரம் செய்யும் நிலையத்திலுள்ள நபருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது
பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் வீதியில் நடமாடியுள்ளனர். இவரிடம் 25 பேர் வரை சேவையை பெற்றுள்ளனர்.
பண்டாரநாயக்க மாவத்தை மாத்திரமின்றி அந்த பகுதியிலுள்ள பலர் குறித்த நபரிடம் சேவையை பெற்றுள்ளனர்.
பொதுமக்களுடைய சுகாதார பாதுகாப்பையும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி அரசாங்கம் பல்வேறு ஒழுங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.