தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வில், முதலாளிமார் சம்மேளம் அசமந்தப் போக்கை கடைபிடிப்பதற்கு எதிப்புத் தெரிவித்து, தோட்ட சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி, நேற்றுக் காலை (11), ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக நடைபெற்றது.
ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக ஆரம்பமான இப்பேரணி, ஹட்டன் பஸ் தரிப்பிடத்துக்குச் சென்று பின்னர் மீண்டும், மணிக்கூட்டுக் கோபுரத்தை வந்தடைந்தது. தோட்ட சேவையாளர்களின் சம்பள உடன்படிக்கையானது, கடந்த 2016 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றுக் கட்டப் பேச்சுக்கள் நடைபெற்றப் போதிலும், இதுவரை சம்பள உயர்வு விடயத்தில் தீர்வுக் கிடைக்காததன் காரணத்தினாலேயே, இவ்வார்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்ததாக, அச்சங்கம் தெரிவித்துள்ளது.
தோட்ட சேவையாளர்கள், 100க்கு 40 சதவீதம், சம்பளவுயர்வை வழங்கக் கோரியப் போதிலும் முதலாளிமார் சம்மேளனம் அதற்கு இணங்க மறுத்துவருவதுடன் 100 க்கு 20 சதவீதம் சம்பளத்தை அதிகரித்து தருவதாக தெரிவித்து. நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தமது இயல்பு வாழ்கையை முன்னெடுக்கை முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.
சம்பளவுயர்வு கோரிக்கைக்கு, முதலாளிமார் சம்மேளனம் உரியத் தீர்வை பெற்றுக்கொடுக்காதபட்சத்தில், எதிர்வரும் 28ஆம் திகதி முதல், நாடளாவிய ரீதியில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க ஜயவர்தன தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டதில் நுவரெலியா, தலவாக்கலை, ஹட்டன் ஆகிய கிளைகளைச் சேர்ந்த 1000 இற்கும் மேற்பட்ட தோட்ட சேவையாளர்கள் கலந்துகொண்டனர்.
நன்றி- தமிழ் மிரர்