
இலங்கை கல்விச் சேவைகளுக்குரிய சேவைப்பிரமாணக் குறிப்புகளுக்கு புறம்பாகவும் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி அங்கீகாரம் இன்றியும் நியமனம் வழங்குவதை தடுத்து நிறுத்துமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கை இலங்கை ஆசிரியர் சங்கமும் அகில இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவைச் சங்கமும் இணைந்து தாக்கல் செய்துள்ளன.
இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை கல்வியியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரிய சேவை ஆகிய நான்கு சேவைகளுக்கும் தனித்தனியான சேவைப்பிரமாணக் குறிப்புக்கள் உள்ளன. குறித்த சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது சேவைப்பிரமாணக் குறிப்புகளுக்கு அமைய வர்த்தமானியில் விளம்பரம் செய்து விண்ணப்பம் கோரி போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை மூலம் ஆட்சேர்ப்பு செய்யவேண்டும். அந்த நியமனங்கள் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி அங்கீகாரத்துடன் செய்யப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேவைப்பிரமாணக் குறிப்புகளுக்குப் புறநடையாகவும் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி அங்கீகாரம் இன்றியும் அரசியல் பழிவாங்கல் மற்றும் அரசியல்வாதிகளின் சிபார்சுகளின் அடிப்படையில் நியமனங்கள் வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
கல்வி அமைச்சின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு எதிராகவே இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை கல்வியியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை நான்கிற்கும் ஆட்சேர்ப்பு செய்யும்போது அவற்றின் சேவைப்பிரமாணக்குறிப்பு நியமனங்களுக்கு அமையவும் பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி அங்கீகாரத்துடனும் ஆட்சேர்ப்பு செய்ய உத்தரவிடவேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குத்தாக்கல் செய்திருப்பது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்ராலின் தகவல் தெரிவிக்கையில், கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் முறையற்ற நியமனங்களுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டோம் அத்துடன் நீதிமன்றத்தின் உதவியையும் நாடியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
வேலைத்தளம்