அரசாங்கம் முறையான திட்டங்களை முன்வைக்குமானால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க தயாராக உள்ளதாக பெருந்தோட்டக் கம்பனிகளின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
தேயிலை கொழுந்து பறிக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் நானுஓயா ரதெல்ல தோட்டத்தில் நேற்றுமுன்தினம் (25) நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஹேலிஸ் நிறுவனத்துக்கு சொந்தமான களனிவெலி, வட்டவல, ஹொரனை ஆகிய பெருந்தோட்டங்களைச் சேர்ந்த 13 தோட்டங்களைச் சேர்ந்த முதல் மூன்று இடங்களைப் பிடித்த போட்டியாளர்கள் கலந்துகொண்டு இவ்விறுதிப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்ட அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையில் நிலையான தன்மை காணப்படுவதிலை. இவ்வாறு கூடிக்குறையில் நிலைக்காணப்படுவதால் தோட்டங்களை கொண்டு நடத்துவது கடினமான காரியமாகும். தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அல்ல 1600 ரூபா கூட வழங்க நாம் விருப்பம்தான். சில தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 30 – 35 கிலோகிராம் கொழுந்து பறிக்கிறவர்களும் உள்ளனர். அவர்கள் அவர்கள் நல்ல சம்பளத்தை பெறுவார்கள். பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கப்போவதாக தெரிவிக்கின்றன. அவ்வாறு பொறுப்பேற்பதென்றால் சட்டத்திட்டங்களின் படி பொறுப்பேற்கவேண்டும். இன்று பலர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்னளர். நிர்வாக செலவு 50 வீதம் செல்வதாக சொல்கின்றனர். அது உண்மையில்லை. நிர்வாகசெலவு வெறும் 9 வீதம் மட்டுமே. ஆனால் 67 சதவீதம் தொழிலாளரின் உற்பத்தி செலவுக்கு செலவாகிறது. உண்மை நிலைமை தெரியாதவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.