மட்டக்களப்பு வாளைச்சேனையில் இயங்கி வந்த பிஸ்மில் ஆடை தொழிற்சாலை திடீரென தீப்பிடித்ததாக கூறி மூடப்பட்டதையடுத்து அதில் பணியாற்றிய அனைவரும் கந்தளாயில் இயங்களும் மற்றொரு தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கந்தளாய் தொழிற்சாலைகள்கும் வாளைச்சேனை தொழிற்சாலைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் சட்டவிரோதமான முறையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமைக்கு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கந்தளாய் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுசேவை சங்கத்தின் அங்கத்தவர்களான குறித்த ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனைக்கமைய தொழிற்திணைக்களத்தின் சேவையை நிறுத்தும் பிரிவின் தொழில் ஆணையாளரிடம் வழங்கிய முறைப்பாட்டையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவுக்கு எதிராக பிஸ்மில் ஆடை உற்பத்தி தொழிற்சாலை இரு தடவைகள் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்த போதும் குறித்த உத்தரவே மீண்டும் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வுத்தரவுக்கமைய நட்டஈடு வழங்கப்படாமையினால் தொழில் ஆணையாளர் குறித்த நிறுவனத்துக்கு எதிராக வாளைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழங்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.