சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டத்தை அரசாங்கம் மாற்றுவது தொழிலாள வர்க்கத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும் என செங்கொடி சங்கம் தெரிவித்துள்ளது.
செங்கொடி சங்கம் விடுத்து சர்வதேச தொழிலாளர் தின செய்தி
மே மாதம் 1ம் திகதி மேதினம், இத் தினம் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்து போராடி பெற்ற தினம். உலகை இயக்கும் தொழிலாளர்களின் சக்தியை அதிகாரத்தில் இருக்கும் முதலாளிகளுக்கு உணர்த்தும் தினம். இத் தினத்தை அரசு மாற்றுவது தொழிலாள வர்க்கத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.
இன்று தொழிற்சாலைகளில் வேலை செய்யும் இளைஞர்கள் தொழிலாளர் போராட்ட சக்தியை அதாவது தொழிலாள வர்க்கத்தின் சக்தியை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தொழிற்சாலைகளுக்குள் எம்மை முழுமையாக முடக்கி கொண்டு, அதிகாரத்திற்கு பயந்து தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தினத்தில் கூட, ஏனைய தொழிலாளர்களுடன் கரம் கோர்க்க முடியாமல் இருக்கும் சூழ்நிலை மாற வேண்டும்.
2018ம் ஆண்டு மே தினத்தில் செங்கொடி சங்கம் கூறும் பிரதான செய்தி யாதெனில் இன்று பெண் தொழிலாளர்கள் அதிகமாக தொழிலாளர் படையில் சேர்ந்துள்ளனர்.
அதேபால பல தொழில் துறைகள் முறைசாரா துறையாக மாற்றப்பட்டு வருகின்றன. நிரந்தர தொழிலாளர்கள் தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றப்பட்டு வருகின்றார்கள். இக் காரணங்களினால் தொழிலாளர் வர்க்கம் பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றது.
எனவே இந்த சூழலை மாற்றுவதற்கு நாம் எந்த மதமாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும், எந்த பாலாக இருந்தாலும், எந்த மொழியை பேசினாலும் பரவாயில்லை. தொழிலாளர் வர்க்கம் என்ற குடையின் கீழ் ஓரணி திரள வேண்டும்.
எமது இந்த ஐக்கியம் தொழிலாள உரிமை போராட்டத்தை நிச்சயம் வெற்றியடையச் செய்யும். தொழிலாளர்கள் முதலாளிகளின் சூழ்ச்சி திட்டங்களுக்குள் அகப்படாமல் தொழிலாளர்களின் சக்தியை புரிந்து கொண்டு உரிமை பேராட்டத்தை கூர்மையடைய செய்ய இணைகரம் கோர்க்க வேண்டும்.
‘தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு எமது வாழ்த்துக்கள்’