சம்பள பிரச்சினை தொடர்பில் ரயில்வே தொழிற்சங்கத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே நேற்று இடம்பெற்ற முக்கியமான கலந்துரையாடல் தீர்வின்றி நிறைவு பெற்றுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள், இயந்திர சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
அத்துடன், அரச துறையினரின் சம்பளம் தொடர்பான விசேட சம்பள ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் அழுத்தத்தினால் நியமிக்கப்பட்ட சம்பள ஆணைக்குழுவின் தீர்மானம் வெளியிடப்படும் இரண்டு மாதங்கள் வரை தம்மால் காத்திருக்க முடியாது என ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டபோது, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த குழுவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள்; சங்கத்தின் செயலாளர் பீ.எம்.பீ. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் அழுத்தத்தினால் நியமிக்கப்பட்ட புதிய ஆணைக்குழுவுக்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமது நிiவேற்றுக் குழுவைக் கூட்டி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் பீ.எம்.பீ. பீரிஸ் தெரிவித்துள்ளார்.