எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர், தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என, ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே, அதன் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
ரயில்வே நிலை பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், இயந்திர சாரதிகள் உள்ளிட்ட 9 தொழிற்சங்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டன.
சம்பளப் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு ரயில் சாரதிகள் கண்காணிப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் கடந்த வாரம் முன்னறிவித்தலின்றி, திடீர் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டனர்.
இதையடுத்து, தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, ரயில்வே தொழிற்சங்கத்தினர் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதேநேரம், ரயில்வே தொழிற்சங்கம் உள்ளிட்ட அரச துறையைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தீர்மானம் மேற்கொள்ள சம்பள ஆணைக்குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
இந்த சம்பள ஆணைக்குழுவானது குறித்த விடயம் தொடர்பில் இரண்டு மாதகால எல்லைக்குள் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற சம்பள நிர்ணய ஆணைக்குழுவினால் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அரச துறையினரின் சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை போக்கும் நோக்கில் புதிய சம்பள ஆணைக்குழுவை அமைக்கும் யோசனைக்கு அமைச்சரவை, கடந்த செவ்வாய் கிழமை அனுமதியளித்தது.
எனினும், அந்த ஆணைக்குழுவின் ஊடாக ரயில்வே தரநிலைகளில் காணப்படும் முரண்பாடுகளை நீக்க முடியாது என ரயில் கட்டுப்பாட்டாளார்களின் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவினால் வேதன முரண்பாடுகளை தீர்க்க முடியும்.
தரநிலைகளின் முரண்பாடுகள் குறித்த தீர்வு காணுவது தொடர்பில் குறித்த ஆணைகுழுவின் பணிகளில் குறிப்பிடபிட்டிருக்க வில்லை.
எனவே, குறித்த ஆணைக்குழுவினால் தமக்கு தீர்வு பெற்றுகொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர், தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என, ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.