ரயில்வே சேவையைச் சேர்ந்த சில தொழிற்சங்க பணியாளர்கள் இன்று (08) நள்ளிரவு முதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் பி.என்.பி.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த சேவை புறக்கணிப்பு தொடரும் என அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் தாம் சேவை புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தபோது தமது பிரச்சினைகளுக்கு இரண்டு வரங்களில் தீர்வை பெற்றுக்கொடுப்பதாக போக்குவரத்து துறை பிரதி அமைச்சர் அசோக அபேசங்க உறுதியளித்திருந்தார்.
எனினும், தற்போது இரண்டு வாரங்களுக்கு அதிக காலம் கடந்துள்ள நிலையில், அவரின் தீர்வொன்று வழங்கப்படவில்லை என ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தமது வேதன பிரச்சினைக்கு தீர்வு வழங்க கோரி இந்த சேவைப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் பி.என்.பி.பீரிஸ் தெரிவித்துள்ளார்.