சம்பளப் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு ரயில் சாரதிகள் கண்காணிப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று முன்னறிவித்தலின்றி, திடீர் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நிதி அமைச்சினால் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது மேற்கொள்ளப்படும் முடிவின் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி சில தொடருந்து தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் இன்று பிற்பகல் 3.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் தொடரூந்து நிலைய அதிபர்கள்இ கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் இயந்திர சாரதிகள் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பணியாளர்களின் திடீர் போரட்டத்தினால், நாடளாவிய ரீதியில் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், தாமதமும் ஏற்பட்டன.
இதனால், பாதிக்கப்பட்ட பயணிகள், எதிர்ப்பு தெரிவித்து தொடரூந்து பயணிகள் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதனால் தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டது.
இதேவேளை, தொடரூந்து பருவசீட்டை கொண்டுள்ள பயணிகள் அரச பேருந்துக்களில் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.