” வாகன விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க 19.12.2019 அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்படும்போது அதனை புகைப்படமெடுத்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் புகைப்பட ஊடகவியலாளர் கயான்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மதுராங்குளியில் லேக் ஹவுஸ் பிரதேச ஊடகவியலாளர் பிரசாத் பூர்னமால்மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேற்படி சம்பவங்களை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இத்தகைய சூழ்நிலையானது ஊடக சுதந்திரத்துக்கும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாகும்.
இதற்கு முன்னரும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அவை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படாததன் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுகின்றோம்.”