வட மாகாணத்தில் உள்ள கணித , விஞ்ஞான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்ட விண்ணப்பங்களில் 456 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,
வட மாகாணத்தில் உள்ள கணித , விஞ்ஞான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்ட விண்ணப்பங்களில் 456 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது. அதாவது வட மாகாணத்தில் தற்போது கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களிற்கான 308 ஆசிரியர்களிற்கு வெற்றிடம் நிலவுகின்றது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசின் அனுமதியுடன் வட மாகாணத்தில் உள்ள குறித்த துறையின் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்தோம்.
அதன் பிரகாரம் தற்போது குறித்த பதவிகளிற்காக 456 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் இருந்து எமது மாகாணத்திற்கு தேவையான 308 ஆசிரியர்களையும் நியமிக்க எண்ணியுள்ளோம். அதன் பால் தற்போது கிடைத்துள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. அதாவது கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் எம்மால் கோரப்பட்ட தகுதிகளைக் கொண்டுள்ளனவா? என ஆராயப்படுகின்றது. அவ்வாறு கோரப்பட்ட தகமை அற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தகுதியுடையதாக கண்டறியப்படுகின்ற விண்ணப்பதாரிகளை உரிய முறைகளில் பரிசீலிக்கப்பட்டதன் பிற்பாடு 308 பேருக்கான நியமனங்கள் வழங்கப்படும். இங்கே 308 பேருக்கு மட்டுமே நியமனம் வழங்க முடியும் என்பதனால் 456 பேரில் இருந்து 308 பேரை மட்டும் தேர்வு செய்கின்ற பொருத்தமான வழி முறைகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது. அவ்வாறு கண்டறியப்படும் வழிமுறைகள் தொடர்பில் நியமனத்தின் முன்னர் அறியத்தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நன்றி – தமிழர் குரல்