வட மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமை புரிந்து இதுவரை நியமனம் கிடைக்கப் பெறாத ஆசிரியர்களுக்கு நீதி கிடைப்பதற்கு நடவடிக்கை
கடந்த யுத்த காலத்தின் போது வட மாகாணப் பாடசாலைகளில் நிலவிய ஆசிரிய பற்றாக்கறைக்கு பதிலீடாக தொண்டர் ஆசிரியர்களாக கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு பல தடவைகள் அமைச்சரவை அனுமதியினைப் பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்றளவில் உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்திருந்த தொண்டர் ஆசிரியர்கள் 1161 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தங்களுக்கு அச்சந்தர்ப்பங்களில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு சில தினங்களுக்கு முன்னர் இசுருபாய,கல்வி அமைச்சின் முன்னால் வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் 37 பேர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இத் தொண்டர் ஆசிரியர்களுக்கு இதற்கு முன்னர் நியமனங்கள் பெற்றுக்கொடுத்த சந்தர்ப்பங்களில் அநீதி இடம்பெற்றதற்கான காரணங்கள் தொடர்பாக இங்கு கல்வி அமைச்சினால் செய்யப்பட்ட விசாரணைகளின் போது சுகயீனம், பிரசவ விடுமுறை, அவசர காரணங்கள் போன்ற பல தனிப்பட்ட காரணங்களினால் அவர்கள் அச்சந்தர்ப்பங்களில் கைவிடப்பட்டார்கள் என அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களில் இருந்து பிரதிநிதிக் குழுவொன்றை கல்வி அமைச்சிற்குள் அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், சேவையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களுக்கு இதுவரை நியமனம் பெற்றுக்கொடுக்கும் போது ஏதேனும் அநீதிகள் இடம்பெற்றிருப்பின் அது தொடர்பான காரணங்களைக் கண்டறிந்து, வட மாகாணக் கல்வி அமைச்சு தலையிட்டு நீதியினைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான பின்னணியினை ஏற்படுத்திக் கொடுக்கும் என கல்வியமைச்சு அக்குழுவினருக்கு அறிவித்திருந்தது.