வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் விவகாரம் தொடர்பில் இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சபை ஒத்திவைப்பின் போது எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இந்தப் பிரேரணையை முன்வைத்துள்ளார்.
அதில் ,வேலையற்ற பட்டதாரிகளில் எல்லா இனத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். போரினால் மிகவும் பாதிகப்பட்டவர்களாக தமிழ் இளைஞர்களே உள்ளதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், இயல்பு நிலைமையை மீள ஏற்படுத்துவதற்குமான படியாக வடக்குக் கிழக்கில் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியது மிக அவசரமாகச் செய்யப்பட வேண்டிய விடயமாகும். இவ்வாறு அரசைக் கோரும்
பட்டதாரிகள் பிரச்சினை, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இப்பொழுது புத்துயிர் பெற்றுள்ளமைக்கு, குறைவடைந்து செல்லும் வேலைவாய்ப்புக்கள், அரச சேவைக்கு முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட ஆள்சேர்ப்புக்கள் நடைபெறாமை, தனியார்துறையில் போதுமான அளவு வேலைவாய்ப்புக்கள் கிடைக்காமை போன்ற காரணிகளின் நீண்டகாலமாக இருந்துவரும் தாக்கமே அடிப்படையாகவுள்ளது.
மூன்று தசாப்த காலமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிகழ்ந்த ஆயுதப் போராட்டத்தின் விளைவாக நிலவிய வன்முறை மற்றும் ஸ்திரமற்ற நிலமைகளின் காரணமாகவே இத்தகைய ஒரு நிலைமை இப்பொழுது தோற்றம் பெற்றுள்ளது. ஆயுத முரண்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை என்பது இன்னமும் தீர்வு காணப்படாத நிலையிலேயே தொடர்கின்றது.
இந்த விடயம் சார்பாகப் பொருத்தமான வழிகளில் தீர்வுகள் காணப்பட வேண்டுமென்பதற்காக வடக்குக் கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர்களும் அந்த மாகாணங்களின் ஏனைய அமைச்சர்களும் உத்தியோகத்தர்களும் அரச தலைவர், தலைமை அமைச்சர் மற்றும் கொழும்பு அரசு அமைச்சர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்கள்.
கொழும்பு அரசின் சேவையிலும், வடக்குக் கிழக்கு மாகாண அரச சேவையிலும் காணப்படுகின்ற பல வெற்றிடங்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு நிரப்பினால் அது அவர்களின் வேலையில்லாப் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வாக அமையும்.
இந்த விடயத்தைக் கவனத்திற் கொண்டு வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சர்களுடனும் கலந்துரையாடி பொருத்தமான வகையில் இந்தப் பிரச்சனைக்கு விரைவான தீர்வைக் காண்பதற்கு கூடிய கவனஞ் செலுத்த வேண்டும் – என்று அந்தச் சபை ஒத்திவைப்புப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதயன்/ வேலைத்தளம்