வட மத்திய மாகாணத்தில் இன்னமும் 1,447 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த 25ம் திகதி 487 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வட மத்திய மாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்பட்டன. ஆனால் நாம் எவ்வித தடையுமின்றி படிப்படியாக அவ்வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தமையினால் இன்று 60-70 வீதமான வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதனால் மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவுக்கு தீர்ந்துள்ளது.
மாகாணத்தில் 15,828 ஆசிரியர்கள் உள்ளபோதிலும் அவர்களில் 704 பேர் நேரடியான கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளனர். அவர்களில் 289 பேர் பதில் அதிபர்களாக கடமையாற்றுவதுடன் 345 பேர் ஆசிரிய ஆலோசகர்களாகவும் 70 பேர் விடயப் பணிப்பாளர்களாகவும் பணியாற்றிக்கொண்டு ஆசிரியர் சம்பளத்தை பெறுகின்றனர்.
வட மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து ஆசிரிய வெற்றிடங்களையும் இவ்வருட இறுதிக்குள் நிரப்பவேண்டும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் அது முடியாத காரியம் என்பது இப்போது எமக்கு புரிகிறது. நான் கடந்த 2012ம் ஆண்டு கல்வியமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் மாகாணத்தில் 776 பாடசாலைகள் மட்டுமே இருந்தன. தற்போது அது 816ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மவ்பிம