எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆசிரியர் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாவிடின் ஆசிரியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுவர் என்று ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் தொடர்பில் சரியான திட்டமிடல் இல்லை. அதிகாரிகள் சில ஆசிரியர்களை கஷ்டப்பிரதேசத்திற்கு அனுப்பாமல் உள்ளனர். ஒரு சிலரை அனுப்பி ஒரு நாளில் திருப்பியழைத்துக்கொள்கின்றனர். இது நியாயமற்ற செயல்.
தீவகக் கல்வி வலயதிலிருந்து 59 பேர், கிளிநொச்சி கல்வி வலயத்திலிருந்து 100 பேர், துணுக்காய் கல்வி வலயத்திலிருந்து 47 பேர், முல்லைத்தீவு கல்வி வலயத்திலிருந்து 28 பேர், மன்னார் கல்வி வலயத்திலிருந்து 5 பேர், மடு கல்வி வலயத்திலிருந்து 55 பேர், வவுனியா வடக்கு கல்வி வலயத்திலிருந்து 29 பேர், வவுனியா தெற்கு கல்வி வலயத்திலிருந்து 21 பேர் என மொத்தமாக 344 ஆசிரியர்கள் இடமாற்றப்பட வேண்டியுள்ளனர். இருப்பினும் யாழ்ப்பாணத்திலிருந்து 53 பேர் மட்டுமே இடமாற்றம் செய்யப் பட்டுச் செல்லவுள்ளனர். இது வடக்கு மாகாண கல்வியமைச்சின் பக்கச் சார்பான செயல்.
இதனை நாம் கண்டிக்கின்றோம். கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் தொடர்பில் சரியான திட்டமிடல் இல்லை. இதைவிடப் புதிதாக ஆயிரத்து 80 பேர் நியமனம் பெறவுள்ளனர்.
எனவே, புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர்களை கஷ்டப் பிரதேசங்களில் நியமனம் வழங்க வேண்டும். அங்கு நீண்டகாலம் சேவையாற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடு.
யாழ்.மாவட்டத்தில் இதுவரை கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றாத ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யவேண்டும். கஷ்டப் பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்விநிலையையும் நாம் கருத்தில் எடுக்கவேண்டும்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நாங்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கடிதங்கள் ஊடாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கையைக் கோரினோம்.
அதற்கு முதலமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பில் எங்களுடன் பேசியுள்ளனர். ஆனால், இன்று வரை என்ன நடவடிக்கை எடுப்பேன் என முதலமைச்சரால் அறிவிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.