நிபந்தனை காலம் முடிந்த பின்னரும் வௌிமாகாணத்தில் பணியாற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த
ஆசிரியர்கள் இடமாற்றம் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து விதிக்கப்பட்ட பணித்தடைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வௌியிட்டுள்ளதுடன் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
கடந்த 10.01.2017 அன்று வெளிமாவட்டத்தில் தமது சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் – வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அலுவலகம் முன்பாக தமது சொந்த வலயத்துக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி – செயலாளர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் மறியலினை மீறி கல்வியமைச்சின் செயலாளரின் வாகனம் செல்ல முற்பட்டவேளை – ஆசிரியர்கள் சிலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் – செயலாளர் – பூட்டப்பட்டிருந்த முன்கதவை ஏறிப் பாய்ந்து வேறொரு வாகனத்தில் சென்றிருந்தார். இதனையறிந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சம்பவஇடத்துக்குச் சென்றபோது – அப்போது காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் உறுதிப்படுத்தினர். இந்த நிலையில் – காயப்பட்ட ஆசிரியர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை – கல்வியமைச்சின் செயலாளராலும் ஆசிரியர் ஒருவர் தன்னை தாக்க வந்ததாக பொலிஸில் முறைப்பாடுசெய்யப்பட்டதாக பின்னர் அறிந்தோம். ஆனால்- தாம் காயமடைந்த நிலையில்- செயலாளர் தன்னைப்பாதுகாப்பதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என ஆசிரியர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சூழலில் – சில ஆசிரியர்களுக்கு விசாரணைக்கான பணித்தடை உத்தரவு சில வலயக் கல்விப் பணிமனைக்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஊழியர்கள் தாம் பாதிக்கப்படும் போது – தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்வது ஜனநாயக ரீதியான உரிமையாகும். இது தொடர்பாக – வடமாகாண கல்விப் பணிப்பாளரிடம் சுட்டிக்காட்டியுள்ளோம். அதற்கு – தாபன விதிக்கோவையில் அதிகாரிகளை மதிக்காமைக்கு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். ஆயினும் நாம் – தாபன விதிக்கோவைகளை விட உயர்வானது இலங்கையின் அரசியல் யாப்பு எனவும் – அதில் ஜனநாயக நாட்டில் பேசும் சுதந்ததிரம், ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் – இது அடிப்படை உரிமை எனவும் தெரிவித்திருக்கின்றோம்.
இவ்வாசிரியர்களுக்கு – வழங்கப்பட்ட பணித்தடை உத்தரவு ஜனநாயக உரிமையை நசுக்கும் செயற்பாடாகும். எனவே பணித்தடை உத்தரவு உடனடியாக இரத்துச் செயப்பட்டு இலங்கை அரசியல் யாப்புக்கமைய அடிப்படை உரிமை நிலைநாட்டப்படவேண்டும். இல்லையேல் – ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் – அடிப்படை மனித சுதந்திரத்தை நிலைநாட்டும் போராட்டமாக – அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து போராட்டமாக கொண்டுசெல்வோம் என்பதை எச்சரிக்;கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.