வட மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் நிலவும் கல்விசாரா பதவி வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வடமாகாணத்தின் அமைச்சர்கள் சபை தொடர்பில் நிலவுகின்ற குழப்பம் காரணமாகவே இந்த சிக்கல் நிலைமை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண சபையின் கீழ் வருகின்ற பாடசாலைகளின் காவலாளிகள் மற்றும் பாடசாலை உதவியாளர்களாக 270 பேரை நியமிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
எனினும் இதற்கு வடமாகாண அமைச்சர்கள் சபையின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
பா.டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதலமைச்சரின் கட்டளைக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையின் காரணமாக, வடமாகாண சபையில் தற்போது ஆறு அமைச்சர்கள் பதவியில் இருக்கின்றனர்.
இது சட்டத்துக்கு முரணானது என்பதால், அமைச்சர்கள் சபையை கூட்டுவதற்கு வடமாகாண ஆளுநரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான அமைச்சர்கள் சபை அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியாமல் இழுப்பறி நிலை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.