இந்திய மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்படைவதாக வட மாகாண கடற்றொழில் இணையத்தின் தலைவர் மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வடமாகாண கடற்றொழில் இணைய தலைவர் ஆலம் தகவல் தருகையில்,
வடமாகாணத்தில் மாத்திரம் 50 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கடற்தொழிலை நம்பி தமது வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் அத்துமீறல் காரணமாக தமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக வட மாகாண கடற்றொழில் இணைய தலைவர் கூறியுள்ளார்.
அத்துடன் மீன்பிடிப்பதற்காக இடபட்டிருக்கும் தமது மீனவர்களின் வலைகள் இந்திய மீனவர்களின் இழுவைப்படகளின் வருகையின் மூலம் கடும் சேதமடைகின்றன.
இதனால் லட்சக்கணக்கிலான நட்டம் மீனவர்களுக்கு ஏற்படுகிறது.
இந்திய மீனவர்களின் வருகையினால் 7 தினங்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை 3 தினங்களுக்குள் தேடவேண்டிய கட்டாயத்துக்குள் தமது மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் பலர் கடற்தொழிலை கைவிட்டு, வேறு தொழில் முறைகளை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தடைசெய்யப்பட்ட வலைகளை சிலர் பயன்படுத்துவதினாலும் தமது தொழில் பாதிப்படைவதாக அவர் குறிப்பிட்டார்.
தென்னிலங்கை மீனவர்கள் இவ்வாறு அத்துமீறியும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியும் தொழில் முறைகளில் ஈடுப்படுகின்றனர்.
இதனால் வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து தென்னிலங்கை மீனவர்களை கட்டுப்படுத்த புதிய யுத்திகளை கையாள வேண்டும் எனவும் ஆலம் கோரினார்.
இது இவ்வாறிஇருக்க கடற்தொழிலை நம்பியிருக்கும் மீனவர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்கப்படும் சலுகைகளும் போதாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடல் தொழிலில் ஈடுபட முடியாத சூழ்நிலையகளிலோ அல்லது அனர்த்த நிலைமைகளின் போதோ அரசாங்கத்தினால் எந்த விதமான கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் எனவும், எதிர்காலத்தில் மீனவர்களுக்கான வாழ்வாதார நலனுதவிகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் வடமாகாண கடற்தொழில் இணைய தலைவர் ஆலம் கோரிக்கை விடுத்தார்.