வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டமொன்று நேற்று (08) நடைபெற்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 1ஏபி தரத்தினைக் கொண்ட இப்பாடசாலையில் சுமார் 2000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஐந்து ஊட்டப் பாடசாலைகளிலிருந்து உயர்தரத்துறைக்கு குறித்த பாடசாலைக்கு மாணவர்கள் வருகின்றனர்.
குறித்த பாடசாலையில் 100 ஆசிரியர்களுக்கான ஆளணித் தேவைப்பாடு காணப்படுகின்றது. இவ்வருடம் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றம் காரணமாக தற்போது 61 ஆசிரியர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சரே தூக்கம் எதற்கு?, பிரதேச அரசியல்வாதிகளே மக்களை ஏமாற்ற வேண்டாம், மாகாணக் கல்விப் பணிப்பாளரே இனப்பாகுபாடு எதற்கு?, வலயக் கல்விப் பணிப்பாளரே வலயத்தை சீரழிக்காதே, மாகாணக் கல்விப் பணிப்பாளரே ஆசிரியர் இடமாற்றத்துக்கான பதிலீடு எங்கே? எப்போது?, வலயக் கல்விப் பணிப்பாளரே மாணவர்களின் கல்வியைச் சீரழிக்காதே, எதிர்கால அரசியலுக்காக மாணவர்களின் கல்வியை சீரழிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த இடத்துக்கு வருகைதந்த கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் நி. இந்திரகுமார், உறுப்பினர்களான கோ.கருணாகரம் மற்றும் இரா.துரைரெட்ணம் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் குறைபாடுகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உரையாடினர்.
இது தொடர்பாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜாவிடம் கேட்ட போது கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தில் கல்குடா கல்வி வலயத்திலிருந்து 123 ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டார்கள். அவர்களுக்கு பதிலீடாக 39 பேர் வழங்கப்பட்ட போதிலும் ஒருவரைத் தவிர எவருமே கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை.
கல்குடா கல்வி வலயத்தில் இந்த பாடசாலை மாத்திரமல்ல செங்கலடி மத்திய கல்லூரி, வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயம், சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயம், கிரான் மகா வித்தியாலயம், வாழைச்சேனை இந்துக்கல்லூரி களுவன்கேணி விவேகானந்த வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு உடனடியாக ஆசிரியர் ஆளணியை வழங்கக்கூடிய கடமைப்பாடு உள்ளது. இந்த விடயம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், கல்விப்பணிப்பாளர் ஆகியோரை சந்தித்து ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கூறியுள்ளேன். இன்னும் 15 நாட்களுக்குள் இந்த பாடசாலைக்கு 12 ஆசிரியர்கள் வழங்குவதாக மாகாணக கல்விப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார். மிகவிரைவில் இந்த பாடசாலைக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மேலும் இந்த வருட இறுதிக்குள் புதிய ஆசிரியர் நியமனத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் போது இந்த பாடசாலைக்கு முழுமையான ஆசிரியர்கள் வழங்கப்படும் என்றார்.
வேலைத்தளம்