இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி கொண்டுவந்திருப்பது ஊடக சுதந்திரத்தை அடக்கும் செயலாகும் என இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்று முன்தினம் (09) நள்ளிரவு வெளியானது.
இந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தொடர்பில் வினவியபோது, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையானது, ஊடக சுதந்திரத்தை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் அல்லது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் செயலாகும்.
தேர்தலொன்றை நாடு எதிர்நோக்கியுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் கூடியவிரையில் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறாக ஊடகங்களை, அரசின் தேசிய தொலைக்காட்சியை, எந்தவித காரணங்களுமின்றி பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டுவந்துள்ளதன் மூலம், ஊடக சுதந்திரத்துக்கு ஒரு வகையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கருதுவதாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிகளுக்கும் மறைமுக அச்சுறுத்தல்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழேதான், தேசிய தொலைக்காட்சி மட்டுமல்ல, இதர தனியார் தொலைக்காட்சிகள் கூட பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு அப்பால், இந்த தொலைக்காட்சிகள் அனைத்தும் அந்த சட்டமூலத்தின் கீழ்தான் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
எனவே, தேசிய தொலைக்காட்சி மட்டுமல்லாமல், இதர தனியார் தொலைக்ககாட்சிகளுக்கும்கூட இது ஒரு மறைமுக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைபோன்றுதான் காணக்கூடியதாக உள்ளது.
தேசிய தொலைக்காட்சியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்த இந்த செயற்பாட்டை, நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, இந்த முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.
ஏற்கனவே, இவ்வாறான ஊடக அடக்குமுறைகள் நிகழ்ந்தபோது, தனது ஆட்சியில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது எனக்கூறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இப்போது சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்குகூட கொண்டுவராமல், அவரின் அறிவுக்குகூட தெரியாமல் இவ்வாறு நடந்திருப்பது, இதன் பின்னணியில் ஏதோ ஒரு செயற்பாட்டின் காரணமாகவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, எந்தக் காரணங்களுமின்றி அதனைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப்பெற்று, முன்னர் இருந்ததுபோல சுயாதீனமாக தேசிய தொலைக்காட்சியை ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.