ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பதிவை மேற்கொள்வதற்காக, அனைத்து பணியாளர்களுக்கும் உரிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என அரச மற்றும் தனியார் துறையினருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
வேதனம் குறைப்பு அல்லது தனிப்பட்ட விடுமுறை நீக்கம் என்பன இல்லாமல், இந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச பணியாளர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவேண்டியது கட்டாயமானது என்றும், தனியார் துறையிலும் அந்த விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தொழில்தருணநர்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
இதற்கமைய, வாக்காளர்கள் தாம் பணிபுரியும் இடத்திற்கும் வாக்களிப்பு நிலையத்திற்கும் இடையிலான தூரம், 40 கிலோமீற்றருக்கு குறைவாக இருக்குமாயின், அரை நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
40 முதல் 100 கிலோமீற்றர்கள் தொலைவில் வாக்களிப்பை மேற்கொள்பவர்களுக்கு ஒருநாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம், வாக்களிப்பு நிலையம், 100 முதல் 150 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்குமாயின், ஒன்றரை நாள் விடுமுறையும், வாக்களிப்பு நிலையம் 150 கிலோமீற்றருக்கு அதிகமான தொலைவில் இருக்குமாயின் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.