
வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்காவிடின் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தென்நே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் உள்வாரி வௌிவாரி என்று பிரித்து பாகுபாட்டை உருவாக்கி மீண்டும் எம்மை அரசாங்கம் வீதியில் இறங்க தூண்டியுள்ளது. அரசாங்கத்தின் இச்செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஐதேக அரசாங்கம் உள்வாரி, வௌிவாரி என்று பிரித்து பட்டதாரிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது.
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி 14 நாட்களில் வௌிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக தமிழ் அரசியல்வாதிகள் உறுதிமொழி வழங்கினாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீர்மானமும் இல்லை. வெறுமனே திகதிகளை வழங்கி பட்டதாரிகளை ஏமாற்றி வருகிறது. தமிழ் அரசியல்வாதிகள் பட்டதாரிகளை நகைச்சுவை பொருளாக பார்க்காமல் நியமனங்களை வழங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு செயற்படவேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றும் ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.