விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக வடக்கிலுள்ள ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளமையினால் வேலையற்ற பட்டதாரிகள் பொறுமை காக்க வேண்டும் என்று யாழ் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் கந்தசாமி கருணாகரன் தெரிவித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கும் வடக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி அமைப்பாளர் க. கருணாகரனுக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக விசேட ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். இன்னும் இரு மாதங்களுக்குள் அரச நியமனங்கள் வழங்கப்படும்.
பட்டதாரி அரச அலுவலர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்றை வகுத்து பட்டப்படிப்புக்களுக்கு பொருத்தமான பதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உரிய சேபைப்பிரமாண குறிப்புக்களை தயாரித்து வழங்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அரசாங்க நிர்வாக அமைச்சுக்கும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கும் கோரியுள்ளார்.
வருடாந்தம் வெளியேறும் பட்டதாரிகளுக்கு இவ்வாண்டுக்குள் பொருத்தமான கொள்கைகள் வகுக்கப்படும். அதேபோல் க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரணதரம் கற்றுத்தேறியவர்கள் மற்றும் தொழில்பயிற்சி,தொழில்நுட்ப பயிற்சிகள் பொருத்தமான அரச நியமனங்கள் தொடர்பிலும் நல்லாடசி ஆராய்ந்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.