வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் மிக மிக அவசியம் என்றால் மாத்திரமே இலங்கைக்கு வரவேண்டுமென்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அது பெரும் உதவியாக அமையும் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரத் ரூபசிறி தெரிவித்தார்.
அதுதொடர்பில் இலங்கையிலுள்ள அவர்களது உறவினர்கள் அவர்களுக்கு வலியுறுத்தவேண்டும் என அறிவுறுத்தும் அவர், மிக அவசியம் என்றால் மட்டுமே அவர்களை நாட்டுக்கு வரவழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்;
துறைமுகம், விமானநிலையம் போன்ற முக்கிய இடங்களில் எமது அதிகாரிகள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தினமும் 5000 பேர் வரை விசா உட்பட பல்வேறு சேவைகளுக்கும் எமது திணைக்களத்துக்கு வருகை தருகின்றனர். 15 நாடுகளுக்கான விஸா நடைமுறை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில நாடுகளுக்கான விஸா தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி – தினகரன்