மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் வேதனம் உயர்வு தொடர்பில் இந்த வாரம் தீர்க்கமான பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கும் தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது
மார்ச் முதலாம் திகதியிலிருந்து 1000 ரூபா வழங்கப்பட உள்ளதாகக் கூறப்பட்ட போதும் அது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை
இந் நிலையில், ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களில் கைச்சாத்திடப்படும். அதன்பின்னர் மார்ச் முதலாம் திகதி முதல் சம்பளம் கணிக்கப்பட்டு அந்த தொகை ஏப்ரல் 10 ஆம் திகதி தொழிலாளர்களின் கைகளுக்கு நிச்சயம் கிடைக்கும் என சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கும் என அன்று அறிவித்திருந்தேன். இன்றும் அதனையே தெளிவாகவே கூறுகின்றேன். வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் நிச்சயம் இன்று (01) முதல் ஆயிரம் ரூபா கிடைக்கும்.
சம்பள உயர்வுக்கான ஒப்பந்தத்தில் சில சரத்துகளில் சிக்கல் இருப்பதால் – அவற்றை திருத்துமாறு கோரியிருந்தோம். அதன் அடிப்படையில் இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.
குறிப்பாக ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டாலும், மார்ச் முதலாம் திகதி முதலே சம்பளம் கணிக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன். இன்று முதல் 31 திகதிவரை தொழிலாளர்கள், வேலைக்கு சென்றால் – வேலை செய்த நாட்களின் பிரகாரம் ஏப்ரல் 10 ஆம் திகதி முழுமையான சம்பளம் கைகளுக்கு கிடைக்கும்.
அத்துடன், பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், ஆயிரம் ரூபா வழங்கப்படாது, அதற்கு பொறுப்புக்கூற யாரும் இல்லை என்றெல்லாம் சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனால், பாராளுமன்றம் கோட்டாபய ராஜபக்ச சிறந்த நிர்வாகி என்பதால் ஆயிரம் ரூபாவை எப்படி வாங்குதென்றும், வழங்குவதென்றும் அவருக்கு நன்கு தெரியும். நானும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன். எனவே, ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளார்.