வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கத்திடம் திட்டமில்லை – ஜே.வி.பி

வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் சரியான திட்டம் ஒன்று இல்லை என ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், 1999, 2005, 2012 ஆண்டுகளில் வேலையில்லாப் பட்டதாரிகள் வேலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இன்று பட்டதாரிகள் வீதிகளில் இறங்கி போரடிய பின்னரே வேலை வாய்ப்புகளை வழங்கும் நிலைமையே காணப்படுகின்றது.

கடந்த 2012 மார்ச் 31 ஆம் திகதியன்றே இறுதியாக பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அதன் பின்னர் இது வரையான காலப்பகுதியில் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறிய பட்டதாரிகள் வேலையில்லாதவர்கள் வரிசையில் இருக்கின்றனர்.

போராட்டங்களின் பின்னர் 2017 இல் வெளியான அறிவித்தலின் படி 57,000 பேர் வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு இன்று வரை அரச தொழில் வழங்கப்படவில்லை.

வேலையில்லா பட்டதாரிகளின் இணைப்பு குறித்து அரசாங்கம் பல அறிவித்தல்களை விடுத்தது. வயது எல்லை 35 என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. 2015 டிசம்பர் 31 வரையான காலப்பகுதி வரையே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

24,000 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதாக கூறப்பட்டது. இதில் அரச கட்சிகளின் கட்சி தலைமைகளில் கட்சி ஆதரவானவர்களை அடிப்படையாக கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் இன்றுவரை அவர்களுக்கு என்ன நடக்குமென தெரியவில்லை. 2015 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னரானவர்களையும் தொழில்வாய்ப்புகளுக்கு இணைத்துக் கொள்வார்களா?

சகலருக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்புகளை வழங்குமா? சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கான தேசிய கொள்கையை அரசாங்கம் தயாரிக்குமா?

எப்படியிருப்பினும் இந்த அரசாங்கத்திடம் வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்த சரியான திட்டம் ஒன்று அரசாங்கத்திற்கு இல்லை என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435