வௌிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் கொரோன தொற்றை தடுப்பதற்கு 14 நாட்களுக்கு வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் செயலாளர், விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் தலைவர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோருடன் நடைபெற்ற நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னர் இத்தீர்மானம் எட்டப்பட்டதாக டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
தென்கொரியா, ஈரான், இத்தாலி, ஆகிய நாடுகளில் இருந்து வருகைத்தரும் இலங்கையரே சுய தனிமைப்படுத்தில் ஈடுபடுமாறு கோரப்பட்டிருந்தனர். இனிவரும் காலங்களில், யார் எங்கிருந்து வந்தாலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடவேண்டும். பொதுவிடங்கள், திருமண நிகழ்வுகள், விருந்துகள் எதிலும் கலந்துகொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வௌிநாட்டு பயணங்கள் செல்வதை முடிந்தளவு குறைத்துக்கொள்ளுமாறு கோருகிறோம். குழுப்பயணங்கள் மேற்கொள்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்களுக்கு இருத்தல் கட்டாயமானது. கோவிட் 19 தொற்றுக்குள்ளாயிருந்தால் அது ஏனையோருக்கும் பரவக்கூடும். பெரும்பாலும் குழுப்பயணங்களினூடாகத்தான் கொரோனா வைரஸ் அதிகம் தொற்றுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறு இருப்பினும், தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்படுவர். இத்தாலி, தென்கொரியா, ஈரான், போன்ற நாடுகளில் இருந்த வரும் பயணிகள் மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகத்திற்கும் கந்தன்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கும் அனுப்பப்படுவார்கள். தனிமைப்படுத்தப்படும் முகாம்களுக்கு அனுப்பப்படமுன்னர் அவர்களுக்கு அத்தியவசிய வசதிகள் வழங்கப்படும். அவர்களுக்கு தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பஸ்களினூடாக முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.