வௌிநாட்டுத் தொழில் நாடி செல்வது தொடர்பிலான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
உள்நாட்டு முகவர் நிலையங்களை பயன்படுத்தி வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடிச் செல்வதை விடவும் ஒன்லைன் மூலம் தொழில்வாய்பை பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றமையினால் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிலாளர் இடப்பெயர்வு தொடர்பிலான தேசிய ஆலோசனை குழுக்கூட்டம் நாராஹேன்பிட்டவிலுள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவில் கூடியபோது அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.
தொழிலாளர் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வௌிநாட்டு தொழில்வாய்ப்புக்கான சட்டதிட்டங்களை புதுப்பிப்பது அவசியம். வௌிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் தொழில்வாய்ப்பு முகவர் நிலையங்களின் பதிவு புதுப்பிக்கப்படவேண்டும்.
2008ம் ஆண்டு புலம்பெயர் தொழிலாளருக்கான இலங்கை தேசியக்கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்னும் நடைமுறையிலும் உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பொருளாதாரநிலை, குடும்பம் மற்றும் ஏனைய மனித உரிமைசார் விடயங்களும் இக்கொள்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன. இதனை பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிகாட்டினார்.