ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களின் சம்பள நிலுவையாக ஏறக்குறைய ஐந்து கோடி ரூபா காணப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. நிலுவைக்கு உரித்தான எல்லா ஆசிரியர்களினதும் தனிப்பட்ட கோவைகள் முறையாக பூர்த்திச் செய்யப்படாத நிலையில் இத்தொகையை மிகச் சரியாக குறிப்பிட முடியாதுள்ளதாக கல்விப் பணிமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இதன் பிரதான காரணியாக ஆளணி மற்றும் கணனி பற்றாக்குறையென தெரிவிக்கப் பட்டது. இந் நிலைமை காரணமாக ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவது தொடர்பாக மலையக ஆசிரியர் ஒன்றியம் தன்கடும் ஆட்சேபனையை தெரிவித்தது.
மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.ஸ்ரீதர். நிர்வாக குழு உறுப்பினர்களான ஜேம்ஸ் விக்டர், மஹேந்திரன் ஆகியோர் அடங்கிய குழு, ஹட்டன் வலய ஆசிரியர்கள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் முக்கிய விடயங்கள் தொடர்பில் கடந்த மாதம் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது ஆசிரியர்களின் சம்பள நிலுவை, பிரமாணக்குறிப்பிற்கு அமைவான பதவி உயர்வு மற்றும் எட்டு வருட சேவை இடமாற்றம் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எவ்வாறாயினும் இப்பிரச்சினைக்கு உடன் தீர்வுகாணும் முகமாக காரியாலயத்தின் கணக்குப்பிரிவில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களை விசேட இப்பணிக்கு அமர்த்திக் கொள்வதோடு இவர்களுக்கான விசேட கொடுப்பனவுகளை மலையக ஆசிரியர் ஒன்றியம் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் இரு மாதங்களில் இப்பணியை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. தேவையான மொத்த நிலுவைப் பணத்தினை மத்திய மாகா ணத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு மலையக ஆசிரியர் ஒன்றியம் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உறுதியளித்துள்ளது.
இதேவேளை சகல ஆசிரியர்களுக்கும் சேவை உள்ளீர்ப்புக் கடிதம் வழங்க்பபட் டுள்ள நிலையில் பதவி உயர்வு கடிதங்கள், குறித்த எண்ணிக்கையானவர்களுக்கே அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நிர்வாக உத்தியோகத்தர் ஏனைய சகல ஆசிரியர்களுக்கும் இப்பதவி உயர்வு கடிதங்களை விரைவில் அனுப்பி வைப்பதற்கும் முனைப்புடன் செயற் படுவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
அத்துடன் எட்டுவருட சேவை இட மாற்றம் கடந்தகாலங்களை போல வருடத்தின் நடுப்பகுதியில் அல்லாமல் இந்த தவணை இறுதிக்கு முன்பதாக, ஆசிரியர்களின் விருப்பம், தேவை என் பனவற்றின் அடிப்படையில் மேற்கொள் ளப்படுவதன் மூலம் ஆசிரியர்களும் பாடசாலையும் எதிர்கொள்ளும் அசெளகரியங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை சம்பள நிலுவைகள் கிடைக்கப் பெறாத ஆசிரியர்கள் இது தொடர்பான விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு மலைய ஆசிரியர் ஒன்றியத்தின் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கும்படி ஆசிரியர்களிடம் கோரப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இராஜசேகரத்துடன் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக் காய்வாளரும் கலந்துகொண்டமை குறிப் பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மலை யக ஆசிரியர் ஒன்றியத்தின் நிர்வாகக் குழு மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மத்திய மாகாண கல்வி செய லாளருடன் தனித்தனியே விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டது.
மாகாண கல்விப் பணிப்பாளருடனான சந்திப்பின்போது ஹட்டன் வலயத்தின் ஆசிரியர்களின் சம்பள நிலுவை தொடர்பான கோவைகள் பூர்த்தி செய்யப்படாமலும் அதனை பூர்த்தி செய்வதில் அசமந்தப் போக்கினை கல்வி வலயம் வெளிக்காட் டுவது குறித்தும் மலையக ஆசிரியர் ஒன்றியம் தங்கள் கடும் ஆட்சேபனையையும் விசனத்தையும் தெரிவித்தது.
ஏறக்குறைய ஐம்பது மில்லியன் ரூபா நிலுவைப் பணமாக செலுத்தப்படவேண்டிய நிலையில் ஹட்டன் கல்வி வலயம் பொருத்தமற்ற காரணங்களைக் காட்டி காலத்தை இழுத்தடிப்பதாகவே ஒன்றியம் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக மாகாண கல்விப் பணிப்பாளர் ஹட்டன் கல்வி வலய நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர் ஆகியோருடன் நேரடியாக தொடர்பு கொண்டு இப்பிரச்சினையை ஒரு மாத காலத்தில் தீர்ப்பதற்குப் பணிப்புரை வழங்கினார்.
ஆளனி பற்றாக்குறையைத் தீர்க்கும் முகமாக மாகாண கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களை பணிக்குப் பெற் றுக்கொள்ளுமாறும் இதனை மேற்பார்வை செய்து தேவையான ஆலோசனைகளையும் வழங்குவதற்காக மாகாண கல்வித் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தரை ஹட்டன் கல்வி வலயத்திற்கு விஜயம் செய்யுமாறும் வலியுறுத்தினார்.
கடந்தமாதம் 29ம் திகதி மத்திய மாகாண முதலமைச்சர் நடாத்திய வலயக் கல்விப் பணிப்பாளரிகளின் கூட்டத்தின் போது ஹட்டன் கல்வி வலயத்தின் சார்பில் தேவைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து எவ்விதமான வேண்டுகோள்களும் விடுக்கப்படாமை ஒன்றியத்திற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சம்பள நிலுவைகளை கணிக்கும் பணியில் மேல திகமாக இணைத்துக் கொள்ளப்படும் உத்தியோகத்தர்களுக்கு தேவையான மேலதிக நிதியை தாம் வழங்குவதற்கும் மாகாண கல்விப் பணிப்பாளர் உறுதி யளித்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி – தினகரன்