கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து குறித்த நம்பிக்கை தற்போது துளிர்விட்டுள்ளபோதிலும் தடுப்பு நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்றும் எமது வழமையான வாழ்க்கைக்கு திரும்புவது மிக நீண்ட பயணமாக இருக்கும் என்று உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல், கைக்கழுவதுதல் மற்றும் பரிசோதனை செய்தல் போன்ற சுகாதார செயற்பாடுகளை தொடர்ச்சியாக, கடுமையாக கடைப்பிடித்தல் மிகவும் அவசியம் என்றும் உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அத்னாம் கெப்ரைஸஸ் மற்றும் உலக சுகாதார அவசர நிலைமைக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் மைக் ரயன் ஆகியோர் உலக நாடுகளுக்கு எச்சரித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின், ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் மிகத் தௌிவான செய்தியை நாம் வழங்குகிறோம். முகக்கவசமானது அனைத்து நாடுகளுக்குமான ஒத்துழைப்பின் அடையாளமாக மாறவேண்டும். பல தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட பரிசோதனையை எட்டியுள்ளன. தொற்றில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள பல தடுப்பு மருந்துகளை வழங்க நாம் அனைவரும் எதிர்பார்த்துள்ளோம். எது எவ்வாறு இருப்பினும் இதுவரை தடுப்புக்கான ஆயுதம் எம் கைவசம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.