கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சட்டங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்னும் இரு தினங்களில் வௌியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
இதனூடாக தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவருக்கு எதிராக கடுமையான தண்டனைகளை நீதிமன்றம் வழங்க முடியும். சட்டங்களை மீறுபவருக்கு பத்தாயிரம் ரூபாவுக்கு குறையாத அபராதமும் 6 மாத சிறைத்தண்டனையும் வழங்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது கொவிட் 19 பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தீர்மானங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக தொற்று நோய் பரவியுள்ள பிரதேசங்களாக சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அடையாளப்படுத்தப்பட்ட பிரசேதங்களில் அறிவிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றன. அவற்றை மீறுவோருக்கு எதிராக இப்புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
குறிப்பாக முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவௌியை பேணாதவர்கள், உடல் உஷ்ட நிலையை பரீட்சிப்பதை நடைமுறைப்படுத்தாதவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.