இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிக்க தென்கொரியா இணக்கம் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென்கொரிய மனிதவள அபிவிருத்தி சேவையின் தலைவர் போராசிரியர் பார்க் யங் பம்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (28) சந்தித்தார்.
விவசாயத்துறையில் இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிப்பதற்கான சாத்தியத்தன்மை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது வினவியுள்ளார்.
மேலும், மீன்பிடித்துறை மற்றும் விவசாயத்துறையில் உள்ள ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியமைக்காக தென்கொரிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தென்கொரிய மனிதவள அபிவிருத்தி சேவையின் தலைவர் இலங்கை தொழிலாளர்களுக்கான்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிக்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் கொரியாவில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தின்போது தமது உயிரைப் பணயம் வைத்து பெண் ஒருவரைக் காப்பாற்றிய இலங்கை ஊழியரின் செயல் காரணமாக கொரியாவில் இலங்கை ஊழியர்கள் பிரபல்யம் பெற்றிருப்பதாகவும் தென்கொரிய மனிதவள அபிவிருத்தி சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பும் 16 நாடுகளில் இலங்கை தற்போது 5 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.