​வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – மத்திய வங்கி

2015 இலிருந்து காணப்பட்ட போக்கினைத் தொடர்ந்து வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பிற்கான வெளிச் செல்லுகைகள் 2019இல் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கிலிருந்து தொழிலாளர் பணவனுப்பல்களின் வீழ்ச்சிக்கேற்ப 2017 தொடக்கம் தொழிலாளர் பணவனுப்பல்களில் தொடர்ச்சியான வீழ்ச்சியொன்றினை இலங்கை சந்தித்து வருகின்றது.

மத்திய வங்கியின் 2019 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆண், பெண்

வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்கான வெளிச் செல்லுகைகள் 2018இன் 211,459 இலிருந்து 2019இல் 203,186 ஆக 3.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

இந்த வீழ்ச்சியானது முக்கியமாக 2018இன் 129,774 இலிருந்து 2019இன் 122,201ஆக 5.8 சதவீதத்தினால் வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக வெளிச்சென்ற ஆண்களின் வீழ்ச்சியால் ஏற்பட்டது. அதற்கு மேலதிகமாக, வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக வெளிச்சென்ற பெண்கள் 2018இல் 81,685 இலிருந்து 2019இல் 80,985 ஆக 0.9 சதவீதத்தினால் சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது.

தொழில் நிபுணத்துவம்

இதேவேளையில், தொழில் நிபுணத்துவம் பெற்ற வகையினர் மற்றும் பகுதியளவில் திறன் வாய்ந்த வகையினர் தவிர அனைத்து திறன் வகையினரின் கீழ் வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்கான வெளிச் செல்லுகைகள் 2019இல் வீழ்ச்சியடைந்தன. கரிசனைக்குரிய காலப்பகுதியில் நடுத்தர மட்டம், எழுதுநர் மற்றும் அது தொடர்பானவை,
திறனுடைய மற்றும் திறனற்ற வகையில் காணப்பட்ட வீழ்ச்சியானது பெரும்பாலும் வெளிச் சென்ற ஆண்களின் வீழ்ச்சியினால் தூண்டப்பட்டது.

திறன் வாய்ந்த பிரிவினரின் வீழ்ச்சியானது 2018 உடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதமாகக் காணப்பட்டதுடன் 2019இல் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காக வெளிச் சென்றவர்களின் மொத்த வீழ்ச்சியில் 52.4 சதவீதமாகப் பங்களித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

வீட்டுப்பணிப்பெண்

வீட்டுப்பணிப்பெண் வகையினர் 2018 உடன் ஒப்பிடுகையில் 5.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்ததுடன், 2019இல் வெளிச் சென்றவர்களின் மொத்த வீழ்ச்சியில் 40.7 சதவீதமாகப் பங்களித்திருந்தது. வீழ்ச்சி காணப்பட்டிருந்த போதிலும், வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பிற்காக வெளிச்
சென்றவர்களில் வீட்டுப்பணிப்பெண் மற்றும் திறனற்ற வகையினர் பெரும்பகுதியினை இன்னும் வகைகூறுகின்றனர். இதேவேளையில், கரிசனைக்குரிய காலப்பகுதியில் நிபுணத்துவ வகையில் 36.8 சதவீத குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பிற்கும் மற்றும் திறன் சார் வகையிலான 6.5 சதவீத வளர்ச்சிக்கும் 30 -34 ஆண்டுகள் வயதுப்பிரிவினரின் ஆண்களின் குறிப்பிடத்தக்களவு வெளிச்செல்லுகைகளினால் பிரதானமாக உந்தப்பட்டது.

மத்திய கிழக்கு

இலங்கைக்கான பிரதான வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு இலக்காக மத்திய கிழக்கு பிரதேசம் தொடர்ந்தும் காணப்பட்டதுடன் இது மொத்த வெளிச் செல்லுகைகளில் ஏறத்தாழ 85.0 சதவீதத்திற்கு வகை கூறியது. அதற்கேற்ப, 97.0 சதவீதமான வீட்டுப் பணிப்பெண் வகையினரும் 71.8 சதவீத திறனற்ற வகையினரும் சவூதி அரேபியா, கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற மத்திய கிழக்கு நாடுகளின் மீது கவனம் செலுத்தியிருந்தனர்.

பால் ரீதியான வெளிச் செல்லுகையின் படி, 80.0 சதவீதமான வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக வெளிச்சென்ற ஆண்களும் 92.5 சதவீதமான வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக வெளிச்சென்ற பெண்களும் மத்திய கிழக்குப் பிரதேசத்தின் மீதே கவனம் செலுத்தியிருந்தனர். இதேவேளையில், மத்திய கிழக்கு நாடுகளில் கொவிட் -19 தொற்றுநோய்ப் பரவியமையால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளின் விளைவாக 2020இல் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பிற்கான வெளிச்செல்லுகைகளில் வீழ்ச்சியானது எதிர்பார்க்கப்படுகின்றது.

பன்னாட்டுத் தொழிற்சந்தையில் குறைவான திறனுடைய தொழிலாளர்களுக்கான கேள்வியில் வீழ்ச்சி காரணமாக தொழில் நிபுணத்துவர்கள், திறனுடைய மற்றும் பகுதியளவில் திறனுடைய பிரிவினர் தொடர்பான பன்னாட்டு தொழிலாளர் தேவையைப் பூர்த்திசெய்வதில் இலங்கை அதிக கவனம் செலுத்த வேண்டும். அண்மையில் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றமானது வேலை முறையில் புரட்சி ஒன்றினை ஏற்படுத்தியிருந்ததுடன் புலம்பெயர் தொழிலாளர்களின் மீது குறிப்பிடத்தக்களவு தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கிணங்க, தன்னியக்கம் மற்றும் எந்திரவியல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தொழில்கள் காரணமாக உயர்வர்க்க
தொழில்களின் இடம்பெயர்வானது தொழிற்துறையில் கோரப்பட்ட திறன்களை சீர்திருத்தியுள்ளன. மேலும், தொலைநிலை மற்றும் தற்காலிக வேலை செயற்திட்டங்களின் படி பன்னாட்டுத் தொழிற்சந்தையில் கட்டமைப்பு ரீதியான மாற்றமொன்று உள்ளது.

பணவனுப்பல்களில் தொடர்ச்சியான வீழ்ச்சி

இந்தச் சந்தர்ப்பத்தில், பெரும்பான்மையான இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் திறனற்ற தொழிலாளர்கள் நிறைந்துள்ள மத்திய கிழக்கு பிரதேசத்திலிருந்து தொழிலாளர் பணவனுப்பல்களின் வீழ்ச்சிக்கேற்ப 2017 தொடக்கம் தொழிலாளர் பணவனுப்பல்களில் தொடர்ச்சியான வீழ்ச்சியொன்றினை இலங்கை சந்தித்து வருகின்றது.

இலங்கைப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தைக் கொண்டிருக்கும் வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களின் முக்கியமானதொரு மூலாதாரமாக தொழிலாளர் பணவனுப்பல்கள் காணப்படுவதுடன், பன்னாட்டு தொழிற்சந்தையில் அதிக போட்டியை ஏற்படுத்துவதற்கு அவர்களின் பொருட்டு உள்நாட்டு தொழிலாளர்களினுடைய டிஜிட்டல் மற்றும் உயர் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமானது புலம்பெயர் செயன்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களையும் ஸ்திரப்படுத்தவதற்கும் மற்றும் கடல்கடந்த சந்தையில் போட்டிமிக்க மனித வளத்திற்கான மிகச் சிறந்த தெரிவினை உருவாக்கும் நோக்குடன் அபிவிருத்திச் செயன்முறைகளுடன்
புலம்பெயர்ந்தவர்களை இணைப்பதற்கும் பல வழிமுறைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதற்கிணங்க, இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டு
தொழில்வாய்ப்பின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, இலங்கை வெளிநாட்டுப் பணியகம் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செயற்பாடுகளின் மீதான 252 திடீர் சோதனைகளை மேற்கொண்டதுடன் சட்டத்தை மீறிய சட்ட விரோதமான முகவர்கள் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள் மீது 2019இல் 461 நீதிமன்ற வழக்குகளையும் தொடுத்திருந்தது.

நலப்பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளின் அடிப்படையில் 2019இல் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 201,806 புலம்பெயர் தொழிலாளர்கள் சார்பில் காப்புறுதிக் கட்டுப்பணமாக ரூ.132.33 மில்லியனை அவர்களைத் தங்கி வாழ்வோருக்கு, தாய் நாட்டிற்கு திருப்பியனுப்புதல், இறப்புக் கோரிக்கைகள் மற்றும் மருத்துவக் கோரிக்கைகள் தொடர்பான காப்புறுதித் திட்டத்தின் கீழ் 2,885 ஆட்களுக்கு ரூ. 104.46 மில்லியனை செலுத்தியிருந்ததுடன், புலம்பெயர் தொழிலாளர்களின் 4,846 குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக ரூ. 121.59 மில்லியனை செலவு செய்ததோடு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினுடைய தொழிலாளர் நலன்புரி நிதியினைப் பயன்படுத்தி 66 தேவைப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிதியியல் உதவியினை வழங்கியதோடு, மொத்தமாக 40 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் வெளிநாட்டில் தங்கியிருந்த போது எதிர்கொண்ட பிரச்சனைகள் காரணமாக தொழிலாளர் நலன்புரி நிதியிலிருந்த ரூ.1.29 மில்லியனையும் காப்புறுதித் திட்டத்தின் கீழ ரூ. 0.92 மில்லியனையும் பயன்படுத்தி தாய்நாட்டிற்கு திருப்பி அழைத்து வந்திருந்தார்கள்.

அதற்கு மேலதிகமாக, 2019ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நிதியியல் ஈடுபாடின்றி தொழிலாளர்களைப் பெறுகின்ற நாடுகளில் சிக்கித் தவிக்கும் 1,669 புலம்பெயர் தொழிலாளர்களை இலங்கையின் தூதுக்குழுக்களினூடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமானது தாய் நாட்டிற்கு திருப்பி அழைத்து வந்திருந்தது. உள்நாட்டு தொழிலாளர்களின் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமானது 5,981 தொழில் தேடுபவர்களுக்கு தேசிய தொழில் முறைத் தகைமை மட்டம் iii தகுதியினை வழங்கியிருந்தது.

ஜப்பான் தொழில்வாய்ப்பு

மேலும், 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜப்பானில் உள்ள 14 தொழில் பிரிவினரை உள்ளடக்கிய இலங்கைத் திறமையான தொழிலாளர்களுக்கான தொழில்வாய்ப்பினை வழங்குவதற்கு 2019இல் இலங்கை மற்றும் ஜப்பான் அரசாங்கங்களுக்கிடையில் கூட்டு ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்ட பின்னர் குறிப்பிட்ட திறமையான தொழிலாளர் ஆட்சேர்ப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்பொழுது, தகுதியுடைய ஆட்களினுடைய தகவல்தளமொன்றானது ஜப்பானிற்கு அனுப்புவதற்கு தயாராகி வருகின்றது. அதற்கு மேலதிகமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொழில்நுட்ப பயிலுனர்களாக ஜப்பானிற்கு .லங்கையில் தொழில் தேடுபவர்களை அனுப்புவதற்கான 2018இல் இலங்கை மற்றும் ஜப்பான் அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் 2019ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 115 தொழில்நுட்பபயிலுனர்களை ஜப்பானிற்கு அனுப்பியதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435