ஆசிரியர் உதவியாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை போதுமானதல்ல என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் உதவியாளர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு 6 ஆயிரம் ரூபாவிலிருந்து 4 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 10 ஆயிரம் ருபாவாக வழங்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் நேற்றுத் தெரிவித்திருந்தார்.
அடுத்த மாதம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலினிடம் எமது இணையத்தளம் தொடர்புகொண்டு வினவியது. இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சுற்றுநிரூபம் ஒன்றை உடனடியாக வெளியிட வேண்டும். அத்துடன், நிலுவைக் கொடுப்பவுடன் அதனை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வாறிருப்பினும், ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தமை போதுமானதல்ல. ஏனெனில், இந்த நாட்டில் ஏனைய தொழில்களில் இவ்வளவு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதில்லை என்று ஆசியர் சங்கத்தின் பிரதான செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்பனவை அதிகரிப்பது மட்டும் போதுமானதல்ல. அவர்களை ஆசிரியர் சேவையின் 3 ஆம் தரத்துக்கு உள்வாங்க வேண்டும். அப்போது அவர்களுக்கு நிர்ந்தர கொடுப்பனவு வழங்கப்படும். மேலும், அவர்களின் சேவைக்காலம் கருத்திற்கொள்ளப்படும். ஆசிரியர் உதவியாளர்களாக அவர்கள் இருந்தால், இவை அனைத்தும் கிடைக்காது.
அவர்கள் பயிற்சியைப் பெற்றால் அல்லது பட்டம் பெற்றால்தான் ஆசிரியர் சேவையில் மூன்றாம் தரத்துக்கு உள்வாங்கப்படுவர். எனவே, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.