1000 ரூபா சாத்தியமாகுமா? அரசாங்கத்தின் அறிவிப்பும், குழப்பங்களும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதன உயர்வை வழங்கும் விடயம் தற்போது இலங்கையின் அரசியல் களத்தில் பேசப்படும் முக்கிய கருப்பொருள்களில் ஒன்றாகியுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகைக்கு முந்தைய தினமான 14ஆம் திகதி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆயிரம் ரூபா வேதனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அறிவித்தலை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை அடுத்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதியினால், தைப்பொங்கல் பண்டிகை காலத்தில் மகிழ்ச்சிக்குரிய அறிவித்தலை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பினர் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியான அடுத்த நாள், அதாவது தைபொங்கல் தினத்தில், ஜனாதிபதியின் அறிவித்தலை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் உறுதிப்படுத்தினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என கொட்டகலையில் நடத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டங்களை முகாமைத்துவம் செய்யும் 22 நிறுவனங்களிடம் அரசாங்க தரப்பினர் உள்ளிட்ட தானும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி ஆயிரம் ரூபாவை தொழிலாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஆறுமுகன் தொண்டமான தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதன உயர்வை வழங்குவதற்காக, தேயிலை சபையினூடாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நிதியை வழங்குவதுடன், அவற்றுக்கு வரிச் சலுகையை வழங்க உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் மஹிநதானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாகவும், கூட்டு ஒப்பந்தத்திற்கும் அதற்கும் இடையில் தொடர்பு இல்லை என்றும் அவர் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதன அதிரிப்பை வழங்குவதற்கு மாதமொன்றிற்கு மேலதிகமாக 37.5 மில்லியன் ரூபா நிதி அவசியமாக உள்ளது என ஜே.வி.பி தகவல் வெளியிட்டது.

எனவே, அந்த நிதி எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும், அதற்கான பொறுமுறை என்ன என்பது தொடர்பிலும் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில், இலங்கை தேயிலை சபை ஒரு முக்கிய அறிவித்தலை வெளியிட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் வேதன அதிகரிப்பிற்காக இலங்கை தேயிலை சபையிடம் இருந்து 37.5 மில்லியன் ரூபா கடன் பெறப்படும் என கூறப்படும் கருத்தினை இலங்கை தேயிலை சபை நிராகரித்துள்ளது என்பதே அந்த அறிவித்தலாகும்.

இந்த நிலையில், தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி; வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் ஜயம்பதி மலால்கொட கூறியுள்ளார்.

இலங்கை தேயிலை சபையிடமிருந்து அரசாங்கம் கடன் பெற்று தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதனத்தை வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. எனவே, அது தொடர்பில் அரசாங்கம் மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அது குறித்து ஆராயப்படுகின்றது.

குறிப்பாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் மூலமாக அது குறித்து மாற்று நடவடிக்கைகளை கையாளவேண்டிவரும். வேதன அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமாயின், அதனை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்ற திட்டம் ஒன்றை கையாள வேண்டும் இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் ஜயம்பதி மலால்கொட கூறியுள்ளார்.

எனவே, ஆயிரம் ரூபா வேதனத்தை மார்ச் முதலாம் திகதியிலிருந்து வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்தல் வெளியிட்டுள்ளபோதிலும், சம்பந்தப்பட்ட தரப்பினர் அது தொடர்பில் தெரிவிக்கும் கருத்துகள் பாரிய முரண்பாட்டு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரம் ரூபா வேதனய உயர்வு தொடர்பில் ஜனாதிபதி அறிவித்தல் வெளியிட்டபோதிலும், அதற்கான பொறிமுறை தொடர்பில் அவர் குறிப்பிட்டிருக்கவில்லை.

அதேபோல, அரசாங்கத்தின் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் இந்த திட்டத்திற்கான பொறிமுறையை இதுவரை தெளிவுபடுத்தவில்லை.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை வழங்கி, ஆயிரம் ரூபா வேதன உயர்வை வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில், ஆயிரம் ரூபா வேதன உயர்வுக்கான பொறிமுறை எ;ன என்பதே பெருந்தோட்டத் தொழிலாளர்களினதும், அவர்கள் சார்பில் ஆயிரம் ரூபா வேதன உயர்வுக்காக குரல்கொடுக்கும் தரப்பினரினதும் கோரிக்கையாக உள்ளது.

ஏனெனில், தங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை வேதனமாக வழங்கப்பட வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், ஜனாதிபதியின் வேதன உயர்வு அறிவிப்பில், இந்த ஆயிரம் ரூபா அதிகரிப்பான நாளாந்த குறைந்த வேதனம் என குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அடிப்படை வேதனம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கவில்லை.

அதேபோலதான் அரசாங்கத்தின் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் இதனைத் தெளிவுபடுத்தவில்லை.

அதுமாத்திரமின்றி, கூட்டு ஒப்பந்தத்திற்கும், இந்த ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்புக்கும் தொடர்பு இல்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.

அவ்வாறெனில், அடுத்த ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போது, இந்த ஆயிரம் ரூபா வேதன உயர்வு எந்த அடிப்படையில் கருத்திற்கொள்ளப்படும் என்ற பாரிய கேள்வி எழுகின்றது.

2018 ஒக்டோபர் மாதம் காலவதியான கூட்டு ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்கு மத்தியில் 2019 ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த அடிப்படை வேதனமாக 1,000 ரூபாவை கோரிவந்த நிலையில், 700 ரூபா அடிப்படை வேதனத்திற்கு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அத்துடன், மேலதிக கொழுந்து ஒரு கிலோவுக்கு கொடுப்பனவாக 50 ரூபாவாவும், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான பங்களிப்பாக 105 ரூபாவும் என நாளொன்றுக்கு 855 ரூபா வேதனமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஜனாதிபதியின் ஆயிரம் ரூபா வேதன உயர்வு அறிவிப்பு எந்த அடிப்படையில் இடம்பெறப்போகிறது என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. அடிப்படை வேதனம் ஆயிரம் ரூபாவா? குறைந்தபட்ச வேதனம் ஆயிரம் ரூபாவா? அடுத்த ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்போது இந்த வேதன உயர்வுக்கு என்ன நடக்கும்? வேதன அதிகரிப்புக்கான அரசாங்கத்தின் பொறிமுறை என்ன? கூட்டு ஒப்பந்த நடைமுறையுடன் ஒப்பிடும்போது, தற்போது அரசாங்கத்தினால் ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு வழங்கப்பட்டாலும், அது நிரந்தர வேதன உயர்வாக இருக்குமா? என்ற பல கேள்விகள் தொழிலாளர் மத்தியிலும், அவர்களுக்கு ஆதரவான தரப்பினர் மத்தியிலும் எழுகின்றது.

ஆனால், இவை யாவற்றுக்கும் தெளிவான விளக்கங்களை வழங்காமல், கடந்த ஜனாதிபதி தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஆயிரம் ரூபா வேதன உயர்வு வழங்கப்படும் என அரசாங்கம் மீண்டும் மீண்டும் அறிவித்து வருகின்றது.

ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைய, ஆயிரம் ரூபா வேதன உயர்வு வழங்கப்பட்டு, கூட்டு ஒப்பந்த நடைமுறையிலும் ஒரு மாற்றம் ஏ;றபடுத்தப்பட்டால், அது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், நிலையான பொறிமுறை வகுக்கப்படாமல், கடந்த தேர்தல் வாக்குறுதிக்காக அல்லது ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்காக வேதனம் அதிகரிக்கப்படுமாயின், அது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பாரிய பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதை அரசாங்கமும், சம்பந்தப்பட்ட தரப்பினரும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.

பாரதி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435