1000/1500 ரூபாவை அவர்கள் பெற்றுககொடுக்கலாம். ஆனால்…

♦பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்குவதாக ஜனாதிபதி தேர்தல் களத்தில் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. 1000ரூபாய், 1500 ரூபாய் என்று பிரதான இரு வேட்பாளர்களினால் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளன.

அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகளும் அந்த சம்பளத் தொகையை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து, மக்களிடம் வாக்கு கேட்கின்றனர்.

இந்த நிலையில், அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளுக்கு அமைய 1000 அல்லது 1500 ரூபாய் நாள் சம்பளம் சாத்தியமாகுமா என்பதை ஆராய வேண்டும்.

♦பெருந்தோட்டங்களின் நிலை…

இந்த விடயத்தில் பெருந்தோட்டங்களின் நிலை, தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி, அதன் சந்தை பெறுமதி என்பன குறித்து கவனம் செலுத்தவேண்டும்.

அதற்கு முதலில் முக்கியமான ஒரு விடயத்தை சிந்திக்க வேண்டும். அதாவது முன்னைய காலத்தில் தேயிலை தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில் தேயிலையின் வாசனை எங்கும் பரவியிருக்கும்.

ஆனால், இப்போது பெரும்பாலும் தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில் தேயிலையின் வாசனையை நுகர முடிகின்றதா என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். உரிய முறையில் பதனிடல் இடம்பெறாவிட்டால்தான் தேயிலையில் வாசனை இருக்காது. வாசனை இருந்தால்தான் உற்பத்தி தரம் உரிய முறையில் பேணப்படும்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் குறுகியகால இலாபநோக்கத்தின் காரணமாக தேயிலை மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட உற்பத்திச் செலவு அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
சர்வதேச சந்தையில் குறிப்பிட்ட நேரத்தில் எந்த வகை தேயிலைக்கு கேள்வி இருக்கின்றதோ அதற்கேற்பவே உற்பத்தியும் இடம்பெறுகின்றது.

தொழிற்சாலையின் உற்பத்தி நிலை அல்லது தமது பிரதேசத்தின் காலநிலை தன்மைகளுக்கு ஏற்ப எவ்வாறான உற்பத்தியில் ஈடுபடுவது சிறந்தது, நீண்டகால உற்பத்தி முறை என்பன குறித்து நிறுவனங்கள் கவனம் செலுத்தாதமையே இதற்கான காரணமாக கூறப்படுகிறது.

அதுமட்டுமன்றி தேயிலை தோட்டங்களை உரிய முறையில் பராமரிக்காதமையும் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மிகவும் முக்கியமான காரணமாக இருக்கின்றது.

குறிப்பாக, இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளின் தேயிலையுடன் ஒப்பிடும்போது சிறந்த விலையை நிர்ணயம் செய்யக்கூடிய தன்மை இலங்கை தேயிலைக்கு இல்லாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சர்வதேச சந்தையில், உற்பத்தி, தரம், விலை என்பதைவிட இலங்கை தேயிலை என்ற நாமத்தில் அடிப்படையிலேயே சந்தைப்படுத்தவேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

♦1000 / 1500 ரூபாய் சாத்தியமா?

இப்படியான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரசியல்வாதிகள் வாக்குறுதி அளிப்பதுபோல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1000 / 1500 ரூபாய் சம்பளம் சாத்தியமானதா என்பது பாரிய கேள்வி.

ஒருவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் மலையக அரசியல்வாதிகளும் கூறுவதுபோல, அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் பலத்தை பயன்படுத்தி 1000 / 1500 ரூபாய் நாள் சம்பளத்தை வழங்கினாலும், எத்தனை நாட்களுக்கு அல்லது எவ்வளவு காலத்திற்கு அந்த சம்பளத்தை வழங்க முடியும் என்ற கேள்வியும் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

♦அரசியல்வாதிகளின் விளக்கம் என்ன?

ஆனால், அது தொடர்பில் இந்த அரசியல்வாதிகள் உரிய முறையில் விளக்கத்தை வழங்கவில்லை. எப்படியான திட்டத்தின் அடிப்படையில் அந்த சம்பளம் வழங்கப்படும் என்பதை அவர்கள் தெளிவான பொறிமுறையுடன் கூறவேண்டும்.

இதற்கான விளக்கத்தை வழங்கவேண்டிய தார்மீக பொறுப்பு அவர்களுக்காக வாக்குகேட்கும் தங்களுக்கு உள்ளது என்பதை மலையக அரசியல்வாதிகள் நினைவிற்கொள்ள வேண்டும்.

சரி, வழங்கிய வாக்குறுதிக்காக ஒருவேளை அரசியல்வாதிகள் 1000 / 1500 ரூபாவை வழங்கிவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோமே.

♦வேலை நாட்கள் எத்தனை?

தேயிலை மலைகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் கொழுந்து இல்லாத நிலையில், 1000 / 1500 ரூபாய் சம்பளத்துடன் ஆகக்கூடியது எத்தனை நாட்களுக்கு வேலை வழங்க முடியும் என்ற ஒரு கேள்வியும் உள்ளது.

7 நாட்களுக்கு ஒரு முறை ஒரு தேயிலை மலையில் கொடுத்து எடுக்கும் சுற்றுமுறை 10 நாட்களுக்கு ஒரு முறையாக மாறும். அப்படியானால், மாதத்திற்கு ஒரு மலையில் 4 சுற்றுகளாக பறிக்கப்படும்கொழுந்து 3 சுற்றுகளாக குறையும். இதனால் வேலை நாட்கள் குறைவடையும்.

அதேநேரம், 10 நாட்களாக சுற்று அதிகரிக்கும்போது கொழுந்து முற்றிவிடுவதுடன், அதன் தரத்திலும் தாக்கம் ஏற்படும்.

எனவே, இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது மேலே கூறியதுபோல அரசியல்வாதிகள் தங்களது அரசியல் பலத்தை பயன்படுத்தி 1000 / 1500 ரூபாய் சம்பளம் வழங்கினாலும், அந்த சம்பள உயர்வினால் நன்மை கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி.

♦மாற்றத்திற்கு….

பெருந்தோட்டத்துறை இன்று ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீண்டகால பொறிமுறையுடன் கூடிய ஒரு திட்டம் மிகவும் அத்தியாவசியமாக உள்ளது.

அரசாங்க உயர்மட்டத்திலிருந்து அதாவது ஜனாதிபதியிடமிருந்து முறையான பணிப்புரையில் ஒரு பொறிமுறை அமைத்து செயல்பட வேண்டும்.

இதற்காக சுமார் 3 ஆண்டுகளுக்கான நீண்டகாலத் திட்டம் அவசியம். இந்த மூன்று ஆண்டுகளில் மறுசீரமைப்புக்காக பெருந்தோட்ட நிறுவனங்கள் பாரிய நட்டத்தை சந்திக்க நேரிடும். அந்த நட்டத்தை எதிர்கொள்வதற்கு நிறுவனங்கள் தயாராக இருக்குமா? இந்த மறுசீரமைப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் மூன்று ஆண்டுகளின் பின்னரே பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுப்பது குறித்து சிந்திக்க முடியும் என்பதே யதார்த்தம்.

♦சிறுதோட்ட உரிமை வழங்குதல்.

மேற்கூறப்பட்ட பிரச்சினைகள் பெருந்தோட்டத்துறையிலும், பெருந்தோட்ட தொழிற்சாலைகளிலும் மாத்திரமே நிலவுகிறன.
சிறுதோட்ட உரிமையாளர்கள் தேயிலை தொழிற்துறையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இலங்கையின் தேயிலை உற்பத்தியில் பெருந்தோட்டத்துறையின் பங்களிப்பு 24.73 வீதமாகும். எஞ்சியவை சிறுதோட்ட உரிமையாளர்களின் பங்கு. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே, தேயிலை தொழிற்துறையை நிலைத்து – நீடிக்கச் செய்வதற்கான வழியாகும்.

அதுமாத்திரமின்றி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார, வாழ்வியலிலும் மாற்றம் ஏற்பட்டு அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு வழியேற்படுத்தும்.

எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் அளவில் தேயிலை தோட்டங்களை பிரித்துக் கொடுத்து அவர்களை சிறுதோட்ட தொழிலாளர்களை உரிமையாளர்களாக மாற்றும் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அப்போது அவர்கள் தங்களின் சுய முயற்சியில் அந்த தேயிலை தோட்டத்தில் நல்ல வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.
சுமார் இரண்டு ஆண்டுகளின் பின்னர் அவர்கள் அதிலிருந்து பயன்பெற முடியும். சாதாரணமாக இரண்டு ஏக்கர் கொண்ட ஒரு தேயிலைத் தோட்டத்தில் மாதம் 1200 கிலோகிராம் வரை கீழே கொழுந்து பறிக்கலாம்.

ஒரு கிலோவுக்கு 80 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 1200 கிலோவுக்கு 96,000 ரூபா அளவில் வருமானம் பெறமுடியும்.
அது அவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வழிமுறையாக இருக்கும்.

♦தொழிற்சங்கங்களின் நிலை

பெருந்தோட்டங்களில் தற்போதைய நிலை குறித்து தொழிற்சங்கங்கள் நன்றாக அறிந்து இருக்கின்ற போதிலும் தொழிலாளர்களிடம் இருந்து சந்தா பணத்தை பெற்றுக் கொள்ளும் அந்த தொழிற்சங்கங்கள் இந்த பெருந்தோட்டத்துறை ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அல்லது தாக்கத்தை சீரமைத்து அத்துறையை கட்டியெழுப்புவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தன என்ற கேள்வி இருக்கின்றது.

அது பற்றி தொழிற்சங்கங்க அரசியல்வாதிகள் தெளிவான விளக்கங்களையும் வழங்க வேண்டிய அவசியம் உள்ளது.

அதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்கள் ஆக மாறும் போது தொழிற்சங்கங்களின் கட்டமைப்புக்கு ஒரு பாரிய தாக்கம் ஏற்படும்.

சிறுதோட்டஉரிமையாளர்களாக மாறியதன் பின்னர் அவர்கள் ஒரு கூட்டுறவு அமைப்பாக செயற்பட்டால் தொழிற்சங்கங்களின் அவசியம் குறித்து கேள்வி எழும்.

தொழிற்சங்கங்கள் அவசியமா? அதற்கு ஒரு தலைமை அவசியமா? சந்தா பணம் செலுத்த வேண்டியது அவசியமா என்ற கேள்விகளும் உருவாகும்.

எனவே, பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாறுவதை தங்களால் எந்தளவு தூரத்திற்கு அங்கீகரிக்க முடியும் என்பதை தொழிற்சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

மக்களின் வாழ்வியலுக்கு நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடிய சிறுதோட்ட உரிமையாளர் என்ற ஒரு முறைமையை உருவாக்குவதற்காக மலையக அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் பலத்தை அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து பயன்படுத்த வேண்டும் என்பதே மலையக மக்களின் ஏகோபித்த கோரிக்கை.

♦சமூக வலைதளங்களுக்கு அப்பால் சமூகமயப்படுத்தப்பட்ட கலந்துரையாடல்

அதுமட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இது குறித்த தெளிவுப்படுத்தல் அவசியமாகும். அதற்காக இளைஞர்களிடையே சமூக வலைதளங்களுக்கு அப்பால் சமூகமயப்படுத்தப்பட்ட கலந்துரையாடல் அவசியமாகிறது. அப்போதுதான் மாற்றம் சாத்தியமாகும். அரசியல்வாதிகளை மாத்திரம் நம்பிக்கொண்டிருந்தால், மாற்றம் இறுதியில் ஏமாற்றமே…

கே.பாரதிராஜா

சிந்தனை சித்திரம் Awantha Artigala

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435